நாகர்கோவில், செப்.08.
நாகர்கோவில் வைத்தியநாதபுரத்தைச் சேர்ந்த நிர்மலா (53), தனது பலசரக்கு கடை அருகே நின்றுகொண்டிருந்தபோது ஆட்டோவில் வந்த இருவர், டீக்கடை ஒன்றின் முகவரியை கேட்டுள்ளனர். அவர் யோசித்துக்கொண்டிருந்தபோது, ஆட்டோவின் பின்புற இருக்கையில் இருந்த நபர் திடீரென நிர்மலாவின் கழுத்தில் இருந்த 3 பவுன் நகையை பறிக்க முயன்றுள்ளார்.
சுதாரித்துக்கொண்ட நிர்மலா, அவரது கையைத் தட்டிவிட்டு அலறியபடி கடைக்குள் ஓடியதால், இருவரும் அங்கிருந்து தப்பிச் சென்றனர். புகாரின் அடிப்படையில் கோட்டாறு போலீசார் வழக்குப்பதிவு செய்து, கண்காணிப்பு கேமரா காட்சிகள் மூலம் ஆட்டோ எண்ணை கண்டறிந்தனர். விசாரணையில் ராமன்புதூரைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் அரவிந்த் (55), டைல்ஸ் தொழிலாளி மனோகர் (43) ஆகியோர் என தெரியவந்ததைத் தொடர்ந்து இருவரையும் போலீசார் கைது செய்தனர். பின்னர் அவர்கள் ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர்.



