அண்ணன்-தம்பி கைது; 30 பவுன் நகை, பணம் மீட்பு
நாகர்கோவில், செப். 1: வடிவீஸ்வரம் கீழரதவீதியைச் சேர்ந்த ஐயப்பன் மனைவி சின்னம்மாள் (77), கணவர் ஏற்கனவே இறந்த நிலையில் தனியாக வசித்து வந்தார். கடந்த ஞாயிற்றுக்கிழமை வீட்டில் கொலை செய்யப்பட்டு, உடல் எரிந்த நிலையில் கிடந்தார். இதுகுறித்து கோட்டாறு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
வடிவீஸ்வரம் பகுதியில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்ததில், விருதுநகரைச் சேர்ந்த வேல்ராஜ் என்ற விக்னேஷ் (32) கொலையில் ஈடுபட்டது தெரியவந்தது. சம்பவம் குறித்து தகவல் கிடைத்த 6 மணி நேரத்திற்குள் போலீசார் அவரை கைது செய்தனர். மேலும், அவரது தம்பி அரவிந்த் (25) என்பவரையும் கைது செய்தனர்.
விசாரணையில், சின்னம்மாளை கொலை செய்துவிட்டு அவரது வீட்டில் இருந்த 30 பவுன் நகை மற்றும் ரூ.25,000 பணத்தை கொள்ளையடித்து தப்பிச் செல்ல வேல்ராஜ் திட்டமிட்டது தெரியவந்ததாக போலீசார் தெரிவித்தனர். இதற்காக தனது தம்பி அரவிந்தை நாகர்கோவிலுக்கு அழைத்ததாகவும், கொலை குறித்து தனக்கு எதுவும் தெரியாது என அரவிந்த் தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது.
கைது செய்யப்பட்ட இருவரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு நாகர்கோவில் சிறையில் அடைக்கப்பட்டனர். அவர்களிடம் இருந்து 30 பவுன் நகை மற்றும் பணம் மீட்கப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர்.
இந்த வழக்கில் வடிவீஸ்வரத்தில் ஊர்க்காவல் கண்காணிப்பு திட்டத்தின் கீழ் அமைக்கப்பட்ட கேமராக்கள் முக்கிய பங்கு வகித்துள்ளன. கடந்த மாதம் இந்த கேமராக்களின் செயல்பாட்டை மாவட்ட எஸ்.பி. ஸ்டாலின் தொடங்கி வைத்திருந்த நிலையில், அதன் மூலம் குற்றவாளியை விரைவாக அடையாளம் காண முடிந்ததாக போலீசார் தெரிவித்தனர்.



