திருப்பூர், பிப். 23 –
திருப்பூர் 15 வேலம்பாளையம் பகுதியில் தமிழ்நாடு அரசு இந்து சமய அறநிலைய துறைக்கு சொந்தமான அருள்மிகு ஸ்ரீ ஊருடையம்மன், ஸ்ரீ விநாயகர் திருக்கோவில் மகா கும்பாபிஷேகம் நடைபெறுகிறது.
இந்த கோவில் கும்பாபிஷேக அழைப்பிதழ் முக்கிய விருந்தினர்கள் உட்பட அனைத்து பக்தர்களுக்கும் அனுப்பிய நிலையில் கோவில் கமிட்டியினர் சமூக மத நல்லிணக்கத்தை வலியுறுத்தும் வகையில் 15 வேலம்பாளையம் பகுதியில் செயல்பட்டு வரும் மஸ்ஜிதே இக்லாஸ் பள்ளிவாசல் மற்றும் மதரசா ஜமாத்தார்களை விழாவில் கலந்து கொள்ள நேரில் அழைப்பு விடுத்தனர்.
இதனைத் தொடர்ந்து 15 வேலம்பாளையம் பகுதியில் செயல்பட்டு வரும் மஸ்ஜிதே இக்லாஸ் பள்ளிவாசல் மற்றும் மதரசா ஜமாத்தார்கள் சார்பில் சமூக மத நல்லிணக்கத்தை வலியுறுத்தும் வகையில் பள்ளிவாசலின் தலைவர் அப்துல் சமது, தலைமையில் 50க்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள் பள்ளிவாசலில் இருந்து 11 சில்வர் தட்டுகளில் சீர்வரிசையாக மாலைகள், பழவகைகள், தேங்காய், இனிப்பு வகைகள், வெற்றிலை சந்தனத்துடன் ஊர்வலமாக ஒரு கிலோமீட்டர் தூரம் ஊர்வலமாகச் சென்று 15 வேலம்பாளையம் பகுதியில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற ஶ்ரீ ஊருடையம்மன் கோவிலுக்கு சென்று கும்பாபிஷேக விழா சிறப்பாக நடைபெறுவதற்கு சீர்வரிசைகளை கோவில் நிர்வாகிகளிடம் வழங்கினர்.
அதனைத் தொடர்ந்து இஸ்லாமியர்களை மாலை அணிவித்து வரவேற்பு கொடுத்த கோவில் நிர்வாக கமிட்டியினர் இஸ்லாமியர்களுக்கு கோவிலை சுற்றி காண்பித்து பின்னர் இருதரப்பினரும் பரஸ்பரமாக கைகளை குலுக்கி வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டனர். மேலும் கும்பாபிஷேக குடமுழுக்கு விழாவிற்கு இஸ்லாமியர்கள் சீர்வரிசையுடன் கோவிலுக்கு ஊர்வலமாக வந்து வழங்கிய நிகழ்வு அப்பகுதி மக்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிகழ்வில் மஸ்ஜிதே இக்லாஸ் பள்ளிவாசலின் செயலாளர். முகமது ரஃபீக், பொருளாளர். சித்தீக், திருப்பூர் மாநகராட்சி முதலாவது மண்டல தலைவர். உமா மகேஸ்வரி வெங்கடாசலம், அறங்காவலர் குழு தலைவர் முத்துராமன், இன்ஜினியர் ஜெயபாலன், வார்டு செயலாளர் செந்தில்குமார், ஈஸ்வரமூர்த்தி மற்றும் கோவில் சிவாச்சாரியார்கள் இஸ்லாமியர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.



