புதுக்கடை, டிச. 8 –
தேங்காப்பட்டணம் மீன்பிடி துறைமுகத்தில் அமைக்கப்பட்டுள்ள கூடுதல் உட்கட்டமைப்பு வசதிகளையும், கன்னியாகுமரி பெரியநாயகி தெருவில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள மீன்பிடி இறங்கு தளத்தில் தூண்டில் வளைவு நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளதையும் காணொலி காட்சி வாயிலாக தமிழக முதல்வர் ஸ்டாலின் நேற்று காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார்.
நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சியர் அழகுமீனா தலைமை வகித்தார். கிள்ளியூர் எம்எல்ஏ ராஜேஷ்குமார் முன்னிலை வகித்தார். பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் குத்துவிளக்கேற்றி, கல்வெட்டினை திறந்து வைத்து, தமிழ்நாடு அரசுக்கு நன்றி தெரிவித்து பேசினார்.
அவர் கூறுகையில்: தமிழ்நாடு அரசு மீனவர்கள் நலனிலும் அவர்கள் வாழ்வாதாரத்தை உயர்த்தி கொள்ளும் வகையில் மீனவ மக்களுக்கென பல்வேறு திட்டங்களை அறிவித்துள்ளது. அந்த வகையில் தேங்காப்பட்டணம், இரைமன்துறை, பூத்துறை உள்ளிட்ட பல்வேறு மீனவ கிராமங்களில் வசிக்கும் மீனவர்களின் நலனுக்காக தேங்காப்பட்டணத்தில் உள்ள மீன்பிடி துறைமுகத்தில் ரூ.60 கோடி மதிப்பீட்டில் கூடுதல் உட்கட்டமைப்பு வசதிகள் கொண்ட துறைமுகத்தினையும், கன்னியாகுமரி பெரியநாயகி தெருவில் ரூ.26 கோடி மதிப்பீட்டில் மீன்பிடி இறங்கு தளத்தில் தூண்டில் வளைவு நீட்டிப்பினை காணொளி காட்சி வாயிலாக திறந்து வைத்துள்ளார்கள். இதன் மூலம் மீனவர்கள் தங்கள் வாழ்வாதாரத்தை மேம்படுத்திக் கொள்ள உதவும் என கூறினார்.
நிகழ்ச்சியில் மீன்வளத்துறை துணை இயக்குநர் கோபிநாத், செயற்பொறியாளர் பிரேமலதா, தமிழ்நாடு மீனவர் நல வாரிய உறுப்பினர் நீரோடி ஜோஸ், மீனவர்கள் உட்பட பலர் கலந்து கொண்டார்கள்.



