தூத்துக்குடி, ஆகஸ்ட் 16 –
தூத்துக்குடி ஸ்பிக் நகர் மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் 79-வது சுதந்திர தினவிழா மிகச்சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. ஸ்பிக் நிறுவனத்தின் முழுநேர இயக்குநரும், பள்ளித் தலைவருமான பாலு அவர்கள் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு தேசியக் கொடியை ஏற்றி வைத்து வீரர்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுச் சிறப்புரையும் ஆற்றினார்.
விழாவில் பள்ளிச் செயலர் டிஎஸ் பிரேம் சுந்தர், பள்ளித் தலைமையாசிரியர் பாபு ராதாகிருஷ்ணன், ஆசிரியப் பெருமக்கள், மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் கலந்து கொண்டனர். மாணவர்கள் ஒன்றிணைந்து இசைத்து பாடிய நாட்டுப்பற்று மிக்க பாடலும், தமிழ், ஆங்கில உரையும், நயமுடன் கூறிய கவிதையும், சின்னஞ்சிட்டுகள் தேசத்தலைவர்கள் போல் வேடம் அணிந்து வந்ததும் அனைவரின் பாராட்டையும் பெற்றது.



