நாகர்கோவில், செப். 9 –
தமிழ்நாடு மீன்தொழிலாளர் யூனியன் செயலாளர் அலெக்சாண்டர் மற்றும் துபாய் சிறையில் விசாரணை கைதியாக வைக்கப்பட்டுள்ள அருள் ரீகன் என்பவர் மனைவி சாஜினி, அவரது உறவினர்கள் ஆகியோர் மாவட்ட ஆட்சியரை சந்தித்து மனு ஒன்றை அளித்தனர். அந்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது: கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் அருகே உள்ள கோடிமுனை ஊரைச் சார்ந்த மரியதாசன் என்பவர் மகன் அருள் ரீகன் என்பவர் வளைகுடா நாடான துபாய் நாட்டில் படகில் சுற்றுலா பயண வழிகாட்டியாக கடந்த ஒரு வருடமாக பணிபுரிந்து வந்துள்ளார்.
அவர் பணியில் இருக்கும்போது சுற்றுலா பயணி போல் துறைமுகத்தின் உள்ளே வந்த ரஷ்ய நாட்டை சார்ந்த நபர் ஒருவர் அவரிடம் அவர் வேலை செய்து வந்த படகை குறித்து விசாரித்து அதனை சுற்றி பார்வையிட்டு உள்ளார். அதன்பின் அங்கிருந்து சென்ற அந்த நபர் வேறொரு படகை திருடி சென்று உள்ளதாக கூறப்படுகிறது.
இதுகுறித்த புகாரின்பேரில் அங்குள்ள போலீசார் அருள் ரீகனையும், அவர் வேலை செய்துவந்த படகின் கேப்டனையும் அழைத்து விசாரணை நடத்தி உள்ளனர். அப்போது அருள் ரீகன், ரஷ்ய நாட்டை சேர்ந்தவர் சுற்றுலா பயணி எனகருதி தான் வேலை செய்து வந்த படகை சுற்றிக் காட்டியதாகவும், வேறொன்றும் தனக்கு தெரியாது என்றும் நடந்த விபரங்களை போலீசாரிடம் தெரிவித்து உள்ளார்.
அதன்பின் அருள் ரீகன் 22-06-2025 அன்று ஒரு மாத விடுமுறையில் இந்தியாவில் உள்ள தனது சொந்த ஊரான கோடிமுனை வந்துள்ளார். பின்னர் விடுமுறை முடிந்து 15-07-2025 அன்று திரும்பவும் துபாய் நாட்டிற்கு வேலைக்கு சென்ற அவரை சார்ஜா விமான நிலையத்தில் வைத்து அங்குள்ள போலீசார் விசாரணைக்கு அழைத்து செல்வதாக கூறி அழைத்து சென்று உள்ளனர். சுமார் இரண்டு மாதம் ஆகியும் இதுவரை அவரை பணிக்கு செல்லவிடாமல் தடுத்து சிறை வைத்துள்ளனர்.
இதுகுறித்து அவரது மனைவி மற்றும் உறவினர்கள் புகார் தெரிவித்தும் நிர்வாகம் எவ்வித நடவடிக்கையும் எடுத்ததாக தெரியவில்லை. எனவே அவரது நிலை குறித்து விசாரித்து அவரை துபாய் போலீசார் விடுதலை செய்திட உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.



