சுசீந்திரம்.செப்.20
திருவனந்தபுரத்தில் நவராத்திரி விழாவில் பங்கெடுத்துக்கொள்ள சுசீந்திரம் முன்னுதித்த நங்கையம்மன் தமிழ்நாடு கேரளா காவல்துறை அணிவகுப்பு மரியாதையோடு புறப்பட்டது.
வருடம் தோறும் திருவனந்தபுரத்தில் நடைபெறும் நவராத்திரி விழாவில் பங்கெடுத்துக் கொள்ள குமரி மாவட்டத்தில் இருந்து சுசீந்திரம் முன்னுதித்த நங்கை அம்மன் குமாரகோவில் முருகன் பத்மநாபபுரம் தேவாரக் கட்டு சரஸ்வதி அம்மன் ஆகிய சாமி சிலைகள் திருவனந்தபுரத்திற்கு பல்லக்கில் ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு அங்கு நடைபெறும் நவராத்திரி விழாவில் வைத்து பூஜைகள் செய்யப்பட்டு நவராத்திரி விழாவில் பங்கெடுத்து விட்டு பின்பு மீண்டும் புறப்பட்டு குமரி மாவட்டத்திற்கு சுவாமி சிலைகள் வருவது வழக்கம்.
அதுபோல இந்த ஆண்டு நவராத்திரி விழாவில் பங்கெடுத்து கொள்வதற்காக இன்று காலை 9:15 மணிக்கு மேல் தமிழக மற்றும் கேரளா போலீசாரின் அணிவகுப்பு மரியாதையுடன் சுசீந்திரம் முன்னுதித்த நங்கை அம்மன் புறப்படும் நிகழ்ச்சி நடைபெற்றது. அதனை முன்னிட்டு அதிகாலை கோவில் நடை திறக்கப்பட்டு அம்மனுக்கு அபிஷேகம் நடைபெற்றது. பின்பு அலங்கரிக்கப்பட்ட அம்மனை அலங்கரிக்கப்பட்ட பல்லக்கில் வைத்து தமிழ்நாடு கேரளா போலீசாரின் அணி வகுப்பு மரியாதையுடன் பேண்ட் வாத்தியங்கள் முழங்க நான்கு ரத வீதியை வலம் வந்தது. அப்பொழுது பக்தர்கள் பூக்களை அம்மனுக்கு தூவி வழிபட்டனர்.
இதில் பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த், சட்டமன்ற உறுப்பினர் தளவாய் சுந்தரம், கோவில்களின் இணை ஆணையர் ஜான்சிராணி, சுசீந்திரம் பேரூராட்சி தலைவர் அனுசுயா, திமுக மாவட்ட துணைச் செயலாளர் பூதலிங்கம் பிள்ளை, இந்து அறநிலையத் துறை அறங்காவல் குழு முன்னாள் தலைவர் பிரபா ஜி. ராமகிருஷ்ணன், திமுக தெற்கு ஒன்றிய செயலாளர் பாபு, மதிமுக ஒன்றிய செயலாளர் பாலசுப்ரமணியம், சுசீந்திரம் வருவாய் ஆய்வாளர் பிரேமலதா உட்பட முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர். கன்னியாகுமாரி டிஎஸ்பி ஜெயச்சந்திரன், திருவனந்தபுரம் டிஎஸ்பி ராபர்ட் ஜோணி தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
பின்பு அம்மன் ஊர்வலம் அங்கிருந்து புறப்பட்டு இரவு சுசீந்திரம் முன்னுதித்த நங்கை அம்மன் பத்மநாபபுரம் நீலகண்ட சுவாமி கோவிலை சென்று அடைகிறது. 20-ம் தேதி காலை 7 மணிக்கு பத்மநாபபுரம் அரண்மனையில் உட்பரிகை மாளிகை மேல் மாடியில் உள்ள பூஜை அறையில் பத்திரமாக பாதுகாக்கப்பட்டு வரும் மன்னர் மார்த்தாண்ட வர்மனின் உடைவாளை கேரளா தொல்லியல் துறை மந்திரி கடனப்பள்ளி ராமச்சந்திரன் முன்னிலையில் குமரி மாவட்ட திருக்கோவில்களின் இணை ஆணையர் ஜான்சிராணி இடம் ஒப்படைக்கும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. அதனைத் தொடர்ந்து காலை 9 மணிக்கு சுசீந்திரம் முன்னுதித்த நங்கையம்மன் மற்றும் முருகன் சிலைகள் பல்லக்கிலும் யானை மீது சரஸ்வதி அம்மன் சிலையும் கொண்டு செல்லப்படும்.
ஏராளமான பக்தர்கள் தமிழக கேரளா போலீசார் ஊர்வலமாக செல்வார்கள். அன்று இரவு குழித்துறை மகாதேவர் கோவிலை சென்றடைந்ததும் அங்கு சாமி சிலைகள் பாதுகாப்பாக பூஜை அறையில் வைக்கப்படும். பின்னர் குழித்துறையில் இருந்து 21-ம் தேதி காலை சுவாமி சிலைகள் புறப்பட்டு நெய்யாற்றின் கரை கிருஷ்ணன் கோவிலில் சாமி சிலைகள் சென்று அடைகின்றன. அப்போது சாமி சிலைகளுக்கு கேரளா அரசு அதிகாரிகள் சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்படுகிறது. தொடர்ந்து 22-ம் தேதி காலை அங்கிருந்து புறப்பட்டு அன்று இரவு திருவனந்தபுரம் பத்மநாப சுவாமி கோவிலுக்கு ஊர் வலமாக சென்றடையும். அங்கும் தேவார கட்டு சரஸ்வதி அம்மன் கோட்டையில் உள்ள நவராத்திரி கொலு மண்டபத்தில் பூஜைகள் செய்து பூஜையில் வைப்பார்கள்.
சுசீந்திரம் முன்னுதித்த நங்கை அம்மன் செங்கோட்டை அம்மன் கோவிலுக்கும் குமாரகோவில் முருகன் ஆரியசாலையில் உள்ள சிவன் கோவிலிலும் வைத்து சிறப்பு வழிபாடுகள், பால்காவடி, அக்னி காவடி போன்றவை நடைபெறுகிறது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்வார்கள். நவராத்திரி பத்து நாட்கள் நடைபெறும் விழா முடிந்த பிறகு சாமி சிலைகள் அங்கிருந்து குமரி மாவட்டத்திற்கு பல்லக்கில் வைத்து ஊர்வலமாக கொண்டு வரப்படும்.
தேவரகட்டு சரஸ்வதி அம்மன், குமாரகோவில் முருகர் சுவாமிகளுக்கு ஆரட்டு நடைபெற்று அலங்கார தீபாரதனையுடன் அந்தந்த கோவில் கருவறைக்கு கொண்டு செல்லப்படுகிறது. அதுபோல சுசீந்திரம் முன்னுதித்த நங்கை அம்மனுக்கு ஆராட்டு நிகழ்ச்சியும் ஸ்ரீ சக்கரத்திற்கு சிறப்பு அபிஷேகமும் செய்யப்பட்டு அலங்கார தீபாராதனையுடன் கருவறைக்கு கொண்டு செல்லப்படும். இதற்கான ஏற்பாடுகளை குமரி மாவட்டம் திருவனந்தபுரம் கோவில் நிர்வாகம் இணைந்து செய்து வருகிறது



