சேலம், ஜூலை9 –
கரூர் ரயில் நிலையத்தில் தண்டவாளப் புதுப்பிப்பு மற்றும் பராமரிப்புப் பணிகள் நடைபெறவுள்ளதால், இன்று (ஜூலை 9) சில ரயில்களின் இயக்கத்தில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.
சேலம் ரயில்வே கோட்டம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ள தகவல்: மயிலாடுதுறை சந்திப்பிலிருந்து காலை 6.15 மணிக்கு புறப்படும் மயிலாடுதுறை-சேலம் எக்ஸ்பிரஸ் (வண்டி எண்: 16811), விராரக்கியம் நிலையம் வரை மட்டுமே பயணிக்கும். இந்த ரயில் வழக்கத்தை போல விராரக்கியம் மற்றும் சேலம் சந்திப்புக்கு இடையே இயக்கப்படாது.
அதேபோல், சேலம் சந்திப்பிலிருந்து நாளை மதியம் 2.05 மணிக்குக் கிளம்ப வேண்டிய சேலம்-மயிலாடுதுறை எக்ஸ்பிரஸ் (வண்டி எண்: 16812), கரூர் சந்திப்பிலிருந்து மதியம் 3.40 மணிக்குத் தனது பயணத்தைத் தொடங்கும். இந்த ரயில் சேலம் சந்திப்பு மற்றும் கரூர் சந்திப்புக்கு இடையே இயக்கப்படாது. இது கரூர் ரயில் நிலையத்திலிருந்து பயணத்தைத் தொடங்கி மயிலாடுதுறை ரயில் நிலையம் வரை மட்டுமே செல்லும்.
பாலக்காடு டவுன் நிலையத்திலிருந்து காலை 6.30 மணிக்கு புறப்படும் பாலக்காடு டவுன்-திருச்சி எக்ஸ்பிரஸ் (வண்டி எண்: 16844), கரூர் சந்திப்புடன் ரயில் பயணம் நிறைவு பெறும் .
பராமரிப்புப் பணிகள் முடிந்த பிறகு, வழக்கமான சேவையைப் போலவே அதே நிறுத்தங்களுடன், கரூர் முதல் திருச்சி சந்திப்பு வரை முன்பதிவு இல்லாத சிறப்பு ரயிலாக இது இயக்கப்படும்.
கோயம்புத்தூர் சந்திப்பிலிருந்து காலை 8 மணிக்குக் கிளம்பும் கோயம்புத்தூர்-நாகர்கோவில் எக்ஸ்பிரஸ் (வண்டி எண்: 16322), கோயம்புத்தூர் மற்றும் திண்டுக்கல் இடையே போத்தனூர், பொள்ளாச்சி மற்றும் பழனி வழியாக மாற்றுப் பாதையில் இயக்கப்படும்.
இதன் விளைவாக, இந்த ரயில் கோயம்புத்தூர் வடக்கு, பீளமேடு, சிங்காநல்லூர், இருகூர், சூலூர் ரோடு, சோமனூர், திருப்பூர், ஊத்துக்குளி, இங்கூர், ஈரோடு, பாசூர், கொடுமுடி, புகலூர், கரூர், பாளையம் மற்றும் எரியோடு ஆகிய ரயில் நிலையங்களில் நிற்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும், போத்தனூர் மற்றும் பொள்ளாச்சி ரயில் நிலையங்களில் கூடுதல் நிறுத்தங்களைக் கொண்டிருக்கும் என்று அந்தச் செய்திக்குறிப்பில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலே குறிப்பிடப்பட்டுள்ள ரயில் தடங்களில் பயணிக்க திட்டமிட்டுள்ள பயணிகள் இந்த மாற்றங்களை கவனத்தில் கொண்டு தங்கள் பயணங்களை திட்டமிடுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.



