தருமபுரி | செப். 23:
தருமபுரி மண்டல போக்குவரத்துக் கழகத்தில் தொழிலாளர் விரோத நடவடிக்கைகளை கண்டித்து, சிஐடியு போக்குவரத்துக் கழக ஊழியர் சங்கம் சார்பில் பொதுமேலாளர் அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஒருநாள் விடுப்புக்கு கிளை மேலாளரிடம் அனுமதி பெற வேண்டும் என்ற நிபந்தனையை கைவிட வேண்டும், தொழிலாளர்களிடம் மரியாதையின்றி நடந்து கொள்ளும் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், ஒப்பந்தம் மற்றும் சட்ட விதிகளுக்கு புறம்பாக தண்டனை வழங்கக் கூடாது உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.
மேலும், கிலோமீட்டர் வருவாய், டயர் மற்றும் ஸ்பிரிங் பட்டை சேதம் உள்ளிட்ட காரணங்களுக்காக தொழிலாளர்களை மேலதிகாரிகளை சந்திக்க அலைக்கழிக்கக் கூடாது என்றும், அதிகாரிகளின் உத்தரவின்படி செல்லும் தொழிலாளர்களுக்கு விதிகளின்படி வருகைப் பதிவு வழங்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது.
மண்டல துணைத் தலைவர் ஜே. முருகன் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், மண்டல தலைவர் எஸ். சண்முகம், பொதுச்செயலாளர் சி. ரகுபதி, பொருளாளர் என். மயில்சாமி உள்ளிட்ட நிர்வாகிகள் கோரிக்கைகளை விளக்கிப் பேசினர். ஓய்வுபெற்றோர் அமைப்பின் தலைவர் மனோன்மணி வாழ்த்திப் பேசினார்.
Meta Description: தருமபுரி மண்டல போக்குவரத்துக் கழகத்தில் தொழிலாளர் விரோத நடவடிக்கைகளை கண்டித்து சிஐடியு சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.



