புதுக்கடை, மே 27 –
கன்னியாகுமரி மாவட்டத்தில் அதிக வருவாய் கிடைக்கும் டாஸ்மாக் கடையாக புதுக்கடை டாஸ்மாக் கடை உள்ளது. இந்த கடையானது கிறிஸ்தவ ஆலயத்திற்கும், பஸ் ஸ்டாண்டிற்கும் அருகில் பொதுமக்களுக்கு இடையூறாக அமைந்துள்ளது. ஆகவே இந்த கடையை அப்புறப்படுத்த வேண்டும் என நீண்ட நாட்களாக பொதுமக்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர். அண்மையில் பொறுப்பேற்ற தமிழக முதல்வர் ஆலயங்களுக்கு அருகிலும் பொதுமக்களுக்கு இடையூறாக இருக்கக்கூடிய டாஸ்மார்க் கடை அப்புறப்படுத்தப்படும் என கூறியதை தொடர்ந்து இந்த கடையை அப்புறப்படுத்த வேண்டும் என கோரிக்கை வலுத்தது.
தொடர்ந்து இந்த கடையை அப்புறப்படுத்த கேட்டு தேமுதிக சார்பில் கடை முன்பு மாவட்ட பொருளாளர் செல்லத்துரை தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. புதுக்கடை பேரூர் செயலாளர் சுனோபர், மாவட்ட கேப்டன் மன்ற செயலாளர் பிறைட் செல்வின் ராஜ், முஞ்சிறை கிழக்கு ஒன்றிய செயலாளர் டாலி , மாவட்ட மருத்துவ அணி செயலாளர் கவாஸ்கர், முஞ்சிறை செயலாளர் தினேஷ், மாவட்டச் செயலாளர் ஐடன் சோனி உட்பட பலர் கலந்து கொண்டனர். போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் டாஸ்மாக் மேலாளர் சரவணன் புதுக்கடை இன்ஸ்பெக்டர் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தி இந்த கடை உடனடியாக அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி கூறியதைத் தொடர்ந்து போராட்டம் கைவிடப்பட்டது.



