தருமபுரி, அக்டோபர் 30 –
தருமபுரி மாவட்டம் தொப்பூர் அடுத்த டி.கணிக்காரஹள்ளி கிராமத்தைச் சேர்ந்த பெருமாள் செட்டி என்பவருக்கு 18 ஏக்கர் விவசாய நிலம் உள்ளது. இவரது மூன்று மகன்கள் சிங்கப்பூர் சென்று அங்கே குடியுரிமை பெற்று வசித்து வருகின்றனர். இந்த நிலையில் டி.கணிக்காரஹள்ளியில் உள்ள ஆறுமுகம், வேலு இரண்டு மகன்களும் இந்த 18 ஏக்கர் விவசாய நிலத்தை விவசாயம் செய்து பராமரித்து வருகின்றனர்.
இந்த நிலையில் ஆறுமுகம் பாகத்தினை மகள் தேவகி-சரவணன் விவசாயம் செய்து வருகின்றனர். இந்த நிலையில் வேலு பாகத்தினை தருமபுரி வட்ட வழங்கல் அலுவலராக பணியாற்றும், மகன் ரஜினி விவசாயம் செய்து வருகிறார். இந்த நிலையில் ரஜினி, தேவகியிடம் இருக்கும் நிலத்தை அபகரிக்கும் நோக்கில் கடந்த 15 ஆண்டுகளுக்கு மேலாக அடிக்கடி தகராறு செய்து வருவதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் கடந்த ஆகஸ்ட் மாதம் தேவகி தனது தம்பி ஜெயபிரகாசுடன் நிலத்தில் கொட்டகை அமைப்பதற்காக வாடகை வாகனத்தை வைத்து பணி செய்தபோது, ரஜினி மற்றும் உறவினர்கள் சுமதி, வனிதா, சின்னப்பிள்ளை, சங்கீதா, கார்த்திக்குமரன், அஜித் உள்ளிட்டார் வாடகை வாகனத்தை கற்களை வீசி விரட்டியும், தேவகி-சரவணன் தம்பதியினரை தகாத வார்த்தைகளால் திட்டி கடுமையாக தாக்கியுள்ளனர். இதனால் காயம் அடைந்த இருவரும் தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுள்ளனர். இது குறித்து தொப்பூர் காவல் நிலையத்தில் புகார் அளித்து வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த நிலையில் சொத்தை அபகரிக்கும் நோக்கில் தங்களது சொத்துக்கும், உயிருக்கும் பாதிப்பு ஏற்பட்டால் ரஜினி மற்றும் அவர் குடும்பம் தான் காரணம். தங்களது சொத்திற்கும், உயிருக்கு பாதுகாப்பு வழங்கி ரஜினி மற்றும் அவரது குடும்பத்தினரின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி சரவணன்-தேவகி தம்பதியினர் காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் மனு கொடுத்தனர். மேலும் எங்களை அடியாட்கள் வைத்தும், வட்டாட்சியர் என்பதால் அதிகார துஷ்பிரயோகம் செய்து வரும் ரஜினி மீது உரிய நடவடிக்கை எடுத்து தங்களது நிலத்தை மீட்டு தர வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.



