குளச்சல், மார்ச் 2 –
குளச்சல் அருகே உள்ள பாலப்பள்ளம் பகுதியை சேர்ந்தவர் குமாரதாஸ். இவருக்கு 2 மகன்கள் உள்ளனர். மூத்த மகன் அஜித் குமார் (31). ஊரில் நில அளவையராக ஒப்பந்த முறையில் வேலை பார்த்து வருகிறார். இளைய மகன் அனில் குமார் (29). இன்னும் திருமணம் ஆகவில்லை. சென்னையில் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்தார். வேலை பிடிக்காமல் ஊருக்கு திரும்பி வந்தவர் அண்ணனுடன் நில அளவு வேலைக்கு சென்று வந்தார்.
இதற்கிடையே கடந்த மாதம் 23ம் தேதி அனில் குமார் அண்ணனுடன் வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்தார். இதனை தந்தை குமாரதாஸ் கண்டித்ததாக கூறப்படுகிறது. இரவு அனில்குமார் சாப்பிடாமல் தன் அறை கதவை பூட்டிவிட்டு உள்ளே இருந்துள்ளார். தாயார் கதவை வெகு நேரம் தட்டியும் கதவு திறக்கவில்லை.
ஜன்னல் வழியாக பார்த்தபோது அனில் குமார் மின்விசிறியில் சேலையில் தூக்கு போட்டு தொங்கிய நிலையில் காணப்பட்டார். உடனே கதவை உடைத்து மீட்டு அவரை ஆம்புலன்ஸ் மூலம் குமரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கொண்டு சேர்த்தனர். அங்கு அனுமதிக்கப்பட்டு கடந்த ஒரு வாரமாக சிகிச்சை பெற்று வந்த அனில் குமார் சிகிச்சை பலனின்றி இன்று பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து குளச்சல் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


