தருமபுரி, ஜூலை 06 –
தருமபுரி அரசு கலைக்கல்லூரியில் உயர்கல்வித்துறை வழிகாட்டுதலின்படி 2026-2027 ம் கல்வி ஆண்டில் முதலாம் ஆண்டு சேர்க்கை பெற்ற மாணவ, மாணவிகளுக்கு ஒரு வார கால அறிமுக பயிற்சி 01-07-2026 முதல் நடைபெற்று வருகிறது. அதில் ஒரு பகுதியாக தருமபுரி மாவட்ட காவல்துறை – சிங்கப்பெண் பிரிவு உதவி ஆய்வாளர் S. கிருஷ்ணவேணி தலைமையிலான சிங்கப்பெண் குழு மாணவ, மாணவிகளுக்கு பெண் குழந்தைகள் பாதுகாப்பு ,பெண்களுக்கான சட்ட உரிமைகள், போக்சோ சட்டம் பற்றிய விழிப்புணர்வு, ஆபத்துக் காலங்களில் குழந்தைகள் எவ்வாறு செயல்பட வேண்டும் என்ற விழிப்புணர்வு உரை நிகழ்த்தினார். கல்லூரியின் முதல்வர் முனைவர் கோ. கண்ணன் தலைமை தாங்கினார்.
மேலும் அதனைத் தொடர்ந்து சமூக செயல்பாட்டாளர், தமிழ் ஆர்வலர், தன்னம்பிக்கை பேச்சாளர் தகடூர் ப. அறிவொளி மாணவர்களுக்கு தன்னம்பிக்கை உரை நிகழ்த்தினார். கல்லூரி உள் புகார் குழு ஒருங்கிணைப்பாளர் ஆங்கிலத்துறை இணைப் பேராசிரியர் சத்யா வழிகாட்டுதல் உரையும்,
மாணவர்களின் கல்வி உதவித்தொகை, மற்றும் ஒழுக்கம் சார்ந்த நடைமுறைகள் குறித்து வேதியியல் துறை இணைப் பேராசிரியர் முனைவர் இரா. கிருபாகரன், புதுமைப்பெண் திட்டம் குறித்து கணினி அறிவியல் துறை பேராசிரியர் முனைவர் ஸ்ரீதர், (UMIS) பல்கலைக்கழக மேலாண்மை தகவல் அமைப்பு குறித்து முனைவர் பி.கௌதம் திருமால்ராயன், மாணவ, மாணவிகளுக்கு எடுத்துரைத்தனர்.
பேராசிரியர்கள் முனைவர் விஜயா தாமோதரன், முனைவர் பி.வி.சாரதி ஆகியோர் முன்னிலை வகித்தனர். அறிமுக பயிற்சி வகுப்பின் ஒருங்கிணைப்பாளர் தாவரவியல் துறை இணை பேராசிரியர் முனைவர் கோ.பிரபாகரன், இணை ஒருங்கிணைப்பாளர்கள் தமிழ் துறை இணைப் பேராசிரியர் முனைவர் கு.சிவப்பிரகாசம், உடற்கல்வி இயக்குனர் முனைவர் கு.பாலமுருகன் ஆகியோர் நிகழ்ச்சிகளை ஒருங்கிணைத்தினர். இந்த அறிமுக பயிற்சி வகுப்புகள் 09 – 07 – 2026 வரை நடைபெற உள்ளது. இந்த நிகழ்ச்சியில் முதலாம் ஆண்டு சேர்க்கை பெற்ற 1,300 மாணவ, மாணவிகள் பங்கேற்றனர்.



