தருமபுரி, ஜூலை 16 –
தருமபுரியில் தமிழ் மாநில மக்கள் கட்டிட தொழிலாளர்கள் மற்றும் அமைப்பு சாரா தொழிலாளர்கள் பேரவை, மனை தொழில் கட்டுமனம் அமைப்பு சாரா அனைத்து தொழில் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் கோரிக்கைகள் வலியுறுத்தல் கூட்டம் மண்டல பொதுச்செயலாளர் மாது தலைமையில் தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.
இந்த கூட்டத்திற்கு மாநில இணைச்செயலாளர் கிஷோர், மாநில தலைவர் முருகன், மாநில பேரவை ஆலோசகர் சின்னத்தம்பி ஆகியோர் வரவேற்புரையாற்றினர்.
தொடர்ந்து நடைபெற்ற கூட்டத்தில் குழந்தைகளுக்கு கல்வி நிதி ,திருமண நிதி, பிரசவ நிதி, விபத்து மரணநிதி ஆகியவற்றை 15 ஆண்டுகளாக ஒரே மாதிரியான நிதி வழங்கப்பட்டு வருகிறது. இதனை தமிழக அரசு உயர்த்தி வழங்குமாறு கோரிக்கை வைக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து தொழிலாளர்களுக்கு தற்போது வழங்கப்படும் மாதாந்திர ஓய்வூதியம் ரூபாய் 1,200 -ல் இருந்து ரூபாய் 3,000 ஆக உயர்த்தி வழங்குமாறு கூட்டத்தின் வாயிலாக தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களிடம் கோரிக்கை வைக்கப்பட்டது.
கட்டுமான தொழிலாள்க்கான வீடு கட்டும் திட்டம் மீண்டும் நடைமுறை படுத்த வேண்டும். ஆட்டோ ஓட்டுநர்கள் சங்கத்தில் பதிவு செய்துள்ள நிலையில் ஆட்டோ இல்லாத உறுப்பினர்களுக்கு புதிய ஆட்டோ வாங்க ஒரு லட்சம் ரூபாய் மானியம் வழங்க வேண்டும். மீன்பிடி தடை காலங்களில் மீனவர்களுக்கு வழங்கப்படும் நிவாரணத் தொகையை ரூபாய் 8,000 இலிருந்து 12,000 ஆக உயர்த்திட வேண்டும். நகர் பகுதிகளில் நடைபாதை ஓரங்களில் சிறு கடைகள் நடத்தும் வியாபாரிகள் கூட்டுறவு வங்கிகளில் பெற்றுள்ள கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும்.
தொழிலாளர் நல வாரியத்தில் பதிவு செய்யப்பட்ட தொழிலாளர்களுக்கு முழு உடல் மருத்துவ பரிசோதனை மற்றும் புற்றுநோய் உள்ளிட்ட தீவிர நோய்களுக்கான இலவச சிகிச்சை வழங்கும் திட்டத்தை செயல்படுத்த வேண்டும். சலவை தொழிலாளர்கள் மற்றும் அனைத்து அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு ரூபாய் 5,000 முதல் 10,000 வரை எளிய கடன் வழங்கும் திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும். நீண்ட காலமாக பணியாற்றும் பத்திரிக்கையாளர்களுக்கு வீடு கட்ட ரூ. 10 லட்சம் கடன் உதவி வழங்க வேண்டும். கட்டுமான மற்றும் அமைப்புசாரா தொழிலாளர்கள் நல வாரியத்தில் கடந்த 15 ஆண்டுகளாக உயர்த்தப்படாமல் உள்ள நலவாரிய நிதி உதவித்தொகைகளை உடனடியாக உயர்த்தி வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
தொழிலாளர்களின் நலனுக்காக கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்றி தொழிலாளர்கள் நலனை பாதுகாத்து தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு வழிவகை செய்யுமாறு தமிழ் மாநில மக்கள் கட்டிட தொழிலாளர்கள் மற்றும் அமைப்பு சாரா தொழிலாளர்கள் பேரவை சார்பில் வலியுறுத்தப்பட்டது.



