தஞ்சாவூர், மே 28 –
தமிழக விவசாயிகள் சங்கம் பயிர் கடன்களை முழுமையாக தள்ளுபடி செய்யக் கோரி தஞ்சாவூர் கலெக்டர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தமிழக விவசாய சங்கம் சார்பில் தமிழக அரசை கண்டித்து தஞ்சாவூர் மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்திற்கு விவசாய சங்கங்களின் கூட்டு இயக்க மாநில துணைத்தலைவர் சுகுமாரன் தலைமை தாங்கினார். மாவட்ட தலைவர் ஜெயபால், மாவட்ட செயலாளர் யுவராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
ஆர்ப்பாட்டத்தில் தேர்தல் வாக்குறுதி படி கூட்டுறவு வங்கி கடன்களில் பெற்ற அனைத்து பயிர் கடன்களையும் முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும் என்றும், நகை கடனையும் முழுமையாக ரத்து செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது. மேலும் உர விலையை குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மேகதாதுவில் அணை கட்டுவதை தடுத்து நிறுத்த, மாநில அரசு மத்திய அரசுக்கு அழுத்தம் தர வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன. இந்த ஆர்ப்பாட்டத்தில் ஏராளமான விவசாயிகள் கலந்து கொண் டு தமிழக அரசுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பினர்.
பின்னர் மாநில துணைத்தலைவர் சுகுமாரன் செய்தியாளர்களிடம் கூறுகையில்: புதிதாக பொறுப்பேற்றுள்ள தமிழக அரசு தேர்தல் வாக்குறுதியில் 5 ஏக்கர் வரை நிலம் வைத்துள்ள விவசாயிகளின் பயிர் கடன்களை முழுமையாக தள்ளுபடி செய்வதாகவும், 5 ஏக்கருக்கு மேல் நிலம் வைத்திருப்போருக்கு 50 சதவீத கடன் தள்ளுபடி வழங்கப்படும் என்று அறிவித்தது. ஆனால் தற்போது அறிவிக்கப்பட்டுள்ள நகைக்கடன் தள்ளுபடி விவசாயிகளுக்கு ஏமாற்றத்தை அளித்துள்ளது. பயிர் கடன்களை முழுமையாக தள்ளுபடி செய்யாவிட்டால் தொடர் போராட்டத்தில் ஈடுபடுவோம்.
மேலும் உரவிலை கடுமையாக உயர்ந்துள்ளதால் விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனை கட்டுப்படுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். மேகதாதுவில் அணைக்கட்டும் முயற்சியை தடுக்க மத்திய அரசுக்கு மாநில அரசு அழுத்தம் கொடுக்க வேண்டும் என்றார்.



