கிருஷ்ணகிரி, ஜூன் 13 –
“தனிநபர், கவர்ச்சி அரசியல் செய்ய பா.ஜ.க., விரும்பவில்லை. கொள்கை பிடிப்போடு செயல்படவே விரும்பும். த.வெ.க., அரசு, தி.மு.க.,வின் ஆட்சிக்கு ஸ்டிக்கர் ஒட்டி ஆட்சி நடத்துகிறது,” என குற்றம்சாட்டினார்.
கிருஷ்ணகிரி, பா.ஜ.க., அலுவலகத்தில் மாவட்ட நிர்வாகிகளுடன் ஆலோசனை கூட்டம் நடந்தது. இதில், பா.ஜ.க., சிறுபான்மை அணியின் தேசிய செயலாளர் வேலூர் இப்ராஹிம் கலந்து கொண்டு ஆலோசனை வழங்கினார்.
தொடர்ந்து, நிருபர்களிடம் அவர் கூறியதாவது: பாரத பிரதமர் மோடி தலைமையிலான, 12 ஆண்டு கால, பா.ஜ.க., ஆட்சி நிறைவு பெற்றுள்ளது. தேசம் முழுவதும் இந்த சேவை, பணிகளை தமிழர்கள் வீடுகள் தோறும் கொண்டு செல்லும் வகையில், பா.ஜ.க., சார்பில் ஒவ்வொரு வீடுகளிலும், தன் தாயின் பெயரால் மரத்தை நட வேண்டும். பொதுமக்கள் அதிகம் உள்ள இடத்தில் துப்புரவு பணி, ரத்ததானம் செய்ய வேண்டும் என வலியுறுத்தினோம்.
பிரதமர் மோடி, 4,400 நாட்களை கடந்து, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு பிரதமராக சாதனை படைத்துள்ளார். கடந்த காலத்தில் பிரதமராக இருந்த நேரு சாதனையை முறியடித்துள்ளார். கடந்த கால காங்கிரஸ்., ஆட்சியில், நாடு பொருளாதாரத்தில், 11வது இடத்தில் பின்தங்கி இருந்தது. மோடி ஆட்சியில் இந்தியா, பொருளாதாரத்தில், 4வது இடத்தில் முன்னேறியுள்ளது.
பெண்கள், விவசாயிகள், இளைஞர்கள், ஏழைமக்கள், என அனைத்து தரப்பு மக்களும் முன்னேற்றம் கண்டுள்ளோம். பா.ஜ.க., ஆட்சியில் மதக்கலவரத்தை ஒழித்துள்ளது. நாட்டின் பாதுகாப்பிலும் முன்னேற்றம் கண்டுள்ளோம். இதை எல்லா நாடுகளும் புகழ்கிறது. தமிழகத்திற்கு மட்டும் கடந்த, 12 ஆண்டுகளில், 14 லட்சம் கோடி ரூபாய் வழங்கி உள்ளது.
திருக்குறளின் தொன்மையறிந்து, 12 மொழிகளில், மொழிபெயர்ப்பு செய்தது. பாராளுமன்றத்தில் தமிழர்களின் அடையாளமான செங்கோல் வைக்கப்பட்டது. ஆனைமங்கலம் செப்பேடு நெதர்லாந்தில் இருப்பதை அறிந்து, அதை அங்கிருந்து நம் நாட்டிற்கு பெற்றுத்தந்த பெருமையும் பிரதமர் மோடியை சேரும். இதுதவிர, குஜராத்தில் அவர் பேசும் போது நம் மொழிகளில் மூத்த மொழி தமிழ் என்கிறார்.
மெட்ரோ ரயில் திட்டம், ரயில் நிலையங்கள் புனரமைப்பு, 4,000 கி.மீ., தேசிய நெடுஞ்சாலை, அதிக மருத்துவ கல்லூரிகள் என தமிழகத்திற்கு தந்த திட்டங்கள் அதிகம். அதை தமிழகத்தில் எடுத்துக்கூறி தமிழகத்தில், பா.ஜ.க, ஆட்சி அமைய கடுமையாக உழைப்போம். பா.ஜ.க, தனிநபர் அரசியல், கவர்ச்சி அரசியல் செய்ய விரும்பாது. நாட்டின் நலன் என்ற கொள்கை பிடிப்போடு மட்டுமே இருப்போம். சொன்னால், அதை செய்வோம் என்ற நம்பிக்கையோடு வாக்குறுதிகள் அளிப்போம். காஷ்மீரில் மாநில சிறப்பு அந்தஸ்து ரத்து, அயோத்தியில் ராமர் கோவில், நாட்டில், 25 கோடி பேர் வறுமை கோட்டிலிருந்து மீட்பு என்ற சாதனைகளை செய்துள்ளோம்.
பிரதமர் மோடி மட்டுமல்ல, அவரது அமைச்சரவையில் ஒருவர் மீது கூட ஊழல் புகார் இல்லாத ஆட்சி. மாநிலத்திற்கான உரிமைகளை பெற்று தருகிறோம். கவர்ச்சியையும், தனிநபரை தலைவா எனக்கூறியும் செய்யும் அரசியல் செய்யவில்லை. த.வெ.க., தலைவர் விஜய், தேர்தலுக்கு முன் பல்வேறு வாக்குறுதிகள் அளித்தார். அதில், எதை செய்தார்.
ஆட்சி பொறுப்பேற்ற அடுத்த நொடி முதல், அனைத்து பஸ்களிலும் பெண்களுக்கு இலவச பயணம் என்றார். முதல்வரான விஜய், அடுத்த நிமிடம், நாள், மாதமாவது அதை செய்தாரா. 2,500 ரூபாய் பெண்களுக்கு மாதம் வழங்கப்படும் என்றார், செய்தாரா. ஆனால் இங்கு தேர்தல் முடிவுகள் வெளியானபோது மேற்கு வங்கத்தில் முடிவுகள் வெளியாகி, பா.ஜ.க, ஆட்சி வந்தது. சுவேந்து அதிகாரி முதல்வராகி மூன்றவாது நாளில் மகளிர் இலவச பயணம் அமலுக்கு வந்துள்ளது.
மகாராஷ்டிராவில், மகளிருக்கு, 1,000 ரூபாய் வழங்கினோம். அடுத்த தேர்தலின் போது, 1,500 ரூபாய் எனக்கூறி, அதையும் வழங்கினோம். தற்போது அம்மாநிலத்தில், 1.30 கோடி மகளிர் அந்த தொகையை பெறுகின்றனர். இங்கு கடவுள் மறுப்பு காட்டுமிராண்டிகளும், நடிகர்கள் கவர்ச்சியையும் காட்டி ஓட்டுகளை பெற்று ஏமாற்றுகின்றனர்.
பாட்டிலுக்கு, 10 ரூபாய் என முன்னாள், தி.மு.க., அமைச்சர் செந்தில்பாலாஜியை கிண்டல் செய்தார்கள். தற்போது மதுவிலக்குத்துறை அமைச்சராக உள்ள விக்னேஷ் தொகுதியான கிணத்துக்கடவுக்கு நான் சென்றேன். அங்கு பஸ் ஸ்டாண்ட், பள்ளி அருகே மதுபாட்டிலுக்கு, 20 ரூபாய் வாங்குவதை ஆதாரத்துடன் வெளியிட்டேன். அதற்கு என்ன பதில். த.வெ.க., தி.மு.க., ஆட்சிக்கு ஸ்டிக்கர் ஒட்டி ஆட்சி நடத்துகிறது.
பெண்கள், தாய்மார்கள், குழந்தைகளை தொட்டால், பா.ஜ., ஆட்சியில் மறுநாளே என்கவுண்டர் நடக்கிறது. த.வெ.க., ஆட்சியில், த.வெ.க., பெண் நிர்வாகியை அக்கட்சியை சேர்ந்தவர்களே பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். ஆனால், த.வெ.க.,வினர் ஒன்றும் புரியாமல் விழிக்கின்றனர், ஒரு மாவுக்கட்டு கூட இல்லை. பா.ஜ., ஆட்சியில் தான், பெண்களை தொட்டால், தோட்டாக்கள் பதில் சொல்லும் நிலை உள்ளது. தேர்தலில் வெற்றி, தோல்வி எங்களுக்கு இலக்கு அல்ல, நாட்டின் முன்னேற்றம் என்ற கொள்கைதான் முக்கியம்.
பா.ஜ.க,வில் தொண்டர்கள் மற்ற கட்சிகளை போல் பதவிக்காக வருபவர்கள் அல்ல. தேசத்தின் நலன் என்ற அடிப்படையில் இருப்பவர்கள். கொள்கைகள் புரியாத சிலர், அது அண்ணாமலையாக இருக்கட்டும், அவர் பின்னால் ஆட்டு மந்தை கூட்டம் போல சென்றவர்களாக இருக்கட்டும். அவர்கள், பா.ஜ.க,வை விட்டு சென்றதால் கட்சிக்கு எந்த இழப்பும் இல்லை.
விஜயதாரணி போல சிலர் வந்தார்கள், சென்றார்கள் என்றே பார்க்க வேண்டும், அது போலத்தான் அண்ணாமலையும். சில்லரைக்காக அவர் செயல்படாமல் சித்தாந்தத்திற்காக செயல்பட்டிருந்தால் மீண்டும் வருவார், இல்லாவிட்டால் தேவையில்லை. பா.ஜ.க, முன்பை விட முனைப்பாக செயல்படும். இவ்வாறு அவர் கூறினார்.



