தஞ்சாவூர், ஜூலை 17 –
தஞ்சாவூர் மாவட்டத்தில் மக்கள் தொகை கணக்கெடுப்பு பணிக்கு 3,902 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர் என்று மாவட்ட கலெக்டர் ரேவதி தெரிவித்தார்.
தஞ்சாவூர் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு கலெக்டர் ரேவதி தலைமை தாங்கி தொடங்கி வைத்தார். எம்பிகள் முரசொலி, சுதா, எம்எல்ஏக்கள் துரை சந்திரசேகரன், அசோக்குமார், விஜய் சரவணன், வருவாய் அதிகாரி தியாகராஜன், மாநகராட்சி ஆணையர்கள் தீபனா விஸ்வேஸ்வரி (தஞ்சாவூர்), சுதா (கும்பகோணம்), ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் தேவநாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
விழிப்புணர்வு நிகழ்ச்சியை தொடங்கி வைத்து கலெக்டர் ரேவதி பேசுகையில்: இந்தியாவில் மக்கள் தொகை கணக்கெடுப்பு இரண்டு கட்டங்களாக நடைபெற உள்ளது. கணக்கெடுப்பு முழுவதும் தொழில் ரீதியாகவும், சுய கணக்கெடுப்பு முறையிலும், முதல் முறையாக நடைபெற உள்ளது. முதல் கட்டமாக வீட்டு பட்டியல் மட்டும் வீடுகள் கணக்கெடுப்பு பணி தொடங்கி 15 நாட்கள் நடைபெற உள்ளது. இரண்டாவது கட்டமாக மக்கள் தொகை கணக்கெடுப்பு 2027 ஆம் ஆண்டு நடைபெற உள்ளது.
தஞ்சாவூர் மாவட்டத்தில் மக்கள் தொகை கணக்கெடுப்பு செய்வதற்கு நகரம் மற்றும் கிராமம் வாரியாக தொடர்புடைய நகராட்சி ஆணையர்கள், பேரூராட்சி செயல் அலுவலர்கள் மற்றும் தாசில்தார்கள் என 32 பொறுப்பு அலுவலர்களின் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். மாநகராட்சிக்கு முதன்மை கணக்கெடுப்பு அலுவலர்கள் நியமனம் செய்யப்பட்டு தலா 4 பொறுப்பு அலுவலர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
தஞ்சாவூர் மாவட்டத்தில் 3,902 கணக்கெடுப்பாளர் மற்றும் கண்காணிப்பாளர்களாக ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் தேர்வு செய்யப்பட்டு மூன்று கட்டங்களாக பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகிறது. பொது மக்கள் அனைவருக்கும் se.census.gov.in என்ற இணைதளம் மூலமாகவும் கியூ ஆர் கோடு மூலமும், கணக்கெடுப்பில் பங்கேற்று தங்களுடைய சுய விவரங்களை தாங்களே பதிவேற்றம் செய்யலாம். பதிவேற்றம் செய்யப்பட்டது உறுதி செய்ய கணக்கெடுப்பாளர் தங்கள் வீட்டுக்கு வருகை தரும் போது அவர்களிடம் அந்த பதிவேற்ற எண்ணை தெரிவிக்க வேண்டும் என்றார்.



