தஞ்சாவூர், மே 30 –
தஞ்சாவூர் மாவட்டத்தில் தூர்வாரும் பணிகள் 90 சதவீதம் நிறைவடைந்துள்ளது என மாவட்ட கலெக்டர் பிரியங்கா பங்கஜம் தெரிவித்துள்ளார்.
தஞ்சாவூர் அடுத்துள்ள பள்ளியக்ரஹாரம் வெண்ணாற்றில் சமூக பொறுப்புணர்வு திட்டத்தின் கீழ் 4 பொக்லின் எந்திரங்கள் மூலம் தூர்வாரும் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்தப் பணிகளை மாவட்ட கலெக்டர் பிரியங்கா பங்கஜம் ஆய்வு செய்தார். அப்போது அவர் இந்த பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என பணியாளர்களை அறிவுறுத்தினார்.
பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: தஞ்சாவூர் மாவட்டத்தில் சிறப்பு தூர்வாரும் பணிகள் நீர்வள ஆதாரத் துறை சார்பில் நடைபெற்று வருகிறது. மாவட்டத்தில் ரூபாய் 26 கோடி மதிப்பீட்டில் 1,300 கிலோமீட்டர் தூரத்துக்கு தூர்வாரும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இவற்றில் இதுவரை 90 சதவீத பணிகள் நிறைவடைந்துள்ளது. மீதமுள்ள பணிகள் ஒரு வாரத்திற்குள் நிறைவடையும்.
அதேபோல் மாவட்டத்தில் உள்ள சி, டி பிரிவு வாய்க்கால்கள் வேளாண் பொறியியல் துறை மூலம் 377 கிலோ மீட்டர் நீளத்திற்கு தூர்வார திட்டமிட்டு, இதுவரை 290 கிலோமீட்டர் நீளத்திற்கு தூர்வாரப்பட்டுள்ளது. தஞ்சாவூர் மாவட்டத்திற்கு ரூபாய் 3.30 கோடி மதிப்பீட்டில் புதிதாக வாங்கப்பட்ட 7 பொக்லைன் இயந்திரங்கள் மூலம் நீர்நிலைகள் சீரமைப்பு பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இந்த எந்திரங்களுக்கான செலவுத் தொகை தனியார் நிறுவனங்களின் சமூக பொறுப்புணர்வு திட்டத்தின் மூலமும், மாவட்ட கலெக்டரின் தன் விருப்ப நிதி மூலமும், செலவு செய்யப்பட்டு வருகிறது. எங்கெல்லாம் நீர்நிலைகள் சீரமைக்க வேண்டுமோ அங்கெல்லாம் எந்திரங்கள் மூலம் சீரமைக்கப்படும்.
புதிதாக வாங்கப்பட்ட அந்த எந்திரங்களை கொண்டு தான் தற்போது வெண்ணாற்றில் பல ஆண்டுகளாக சுத்தம் செய்யாமல் இருந்த இரு கரைகளும் சுத்தம் செய்யப்பட்டு, ஆற்றுக்குள் இருந்த நாணல், மண் திட்டுகள் அகற்றப்பட்டு வருகிறது.
முதல் கட்டமாக பெரிய கோவில் அகழி சுத்தம் செய்யப்பட்டுள்ளது. தொடர்ந்து கோட்டை சுவர் சுத்தம் செய்யப்பட உள்ளது. மாவட்டம் முழுவதும் 589 ஊராட்சிகளில் ஊரக வளர்ச்சிதுறைக்கு சொந்தமான 3,000 நீர் நிலைகள் உள்ளன. மேலும் நீர்வள துறைக்கு சொந்தமான ஏராளமான நிர் நிலைகள் உள்ளன. இதை அந்தந்த பகுதியில் உள்ள பொதுமக்கள் சுத்தமாக வைத்துக் கொள்ள முன் வர வேண்டும். இதற்கான மாபெரும் இயக்கம் நடைபெற இருக்கிறது.
அதேபோல் பொதுமக்களும், இளைஞர்களும், தாமாக முன்வந்து நீர்நிலைகளை சீரமைக்க இதுவரை 7 கோரிக்கைகள் வந்துள்ளது. இதை பரிசீலனை செய்து விரைவில் அதற்கான அனுமதி மாவட்ட நிர்வாகம் வழங்கும் இவ்வாறு அவர் கூறினார். ஆய்வின் போது மாநகராட்சி கவுன்சிலர் செந்தமிழ் செல்வன் மற்றும் அதிகாரிகள் உடன் இருந்தனர்.



