தஞ்சாவூர், பிப்ரவரி 24 –
தஞ்சாவூர் மாவட்டத்தில் இறுதி வாக்காளர் பட்டியலை அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் மாவட்ட கலெக்டர் பிரியங்கா பங்கஜம் வெளியிட்டார். அதன்படி தஞ்சாவூர் மாவட்டத்தில் மொத்தம் 19.51 லட்சம் வாக்காளர்கள் உள்ளனர். 1.47 லட்சம் வாக்காளர்கள் நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
தஞ்சாவூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்த இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப் பட்டது .இதனை மாவட்ட தேர்தல் அலுவலரும், கலெக்டருமான பிரியங்கா பங்கஜம் அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் வெளியிட்டார்.
பின்னர் கலெக்டர் பிரியங்கா பங்கஜம் செய்தியாளர்களிடம் கூறியதாவது: தேர்தல் ஆணையத்தின் உத்தரவுப்படி தஞ்சாவூர் மாவட்டத்தில் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தத்துக்கு முன்பு தஞ்சாவூர் மாவட்டத்தில் 20 லட்சத்து 98 ஆயிரத்து 561 வாக்காளர்கள் இருந்தனர்.
கடந்த டிசம்பர் மாதம் 19ம் தேதி வெளியிடப்பட்ட விரைவு வாக்காளர் பட்டியலின்படி 8 சட்டசபை தொகுதிகளிலும் 9, இலட்சத்து 19 ஆயிரத்து 973 ஆண்கள் வாக்காளர்கள், 9 இலட்சத்து 71 ஆயிரத்து 935 பெண் வாக்காளர்கள், 150 மூன்றாம் பாலினத்தவர்கள் உட்பட மொத்தம் 18 லட்சத்து 92 ஆயிரத்து 058 வாக்காளர்கள் இடம் பெற்றிருந்தனர். 2 இலட்சத்து 6 ஆயிரத்து 502 பேர் நீக்கம் செய்யப்பட்டு இருந்தனர்.
இறந்த மற்றும் இரட்டை பதிவு என கருதப்பட்டு வாக்காளர் பட்டியலில் இருந்து பெயர் நீக்கம் செய்யப்பட்ட வாக்காளர்கள் தங்களது பெயரை மீண்டும் வாக்காளர் பட்டியலில் சேர்க்கும் வகையில் இந்திய தேர்தல் ஆணையத்தால் பரிந்துரைக்கப்பட்ட 13 ஆவணங்களில் ஏதேனும் ஒன்றை இணைத்து விண்ணப்பிக்க அறிவிக்கப்பட்டது. அதன்படி மனுக்கள் பெறப்பட்டு விசாரணை நடத்தியதின் அடிப்படையில் 29 ஆயிரத்து 329 ஆண் வாக்காளர்கள், 35 ஆயிரத்து 236 பெண் வாக்காளர்கள், 8 மூன்றாம் பாலினத்தவர்கள் உட்பட 64 ஆயிரத்து 573 வாக்காளர் களின் பெயர்கள் சேர்க்கப்பட்டும், 5186 வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்பட்டும் உள்ளது.
அதன்படி இறுதி வாக்காளர் பட்டியலின்படி தஞ்சாவூர் மாவட்டத்தில் ஆண் வாக்காளர்கள் 9 லட்சத்து 47 ஆயிரத்து 278 பேரும், பெண் வாக்காளர்கள் 10 லட்சத்து 4 ஆயிரத்து 12 பேரும், மூன்றாம் பாலினத்தவர் 155 பேரும் என மொத்தம் 19 லட்சத்து 51 ஆயிரத்து 445 வாக்காளர்கள் உள்ளனர். வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணி மூலம் 1 லட்சத்து 47 ஆயிரத்து 116 வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளனர்.
தஞ்சாவூர் மாவட்டத்தில் முன்பு 2 ஆயிரத்து 311 வாக்கு சாவடிகள் இருந்தன. தற்போது 185 வாக்கு சாவடிகள் அதிகரிக்கப்பட்டு மொத்தம் 2 ஆயிரத்து 496 வாக்கு சாவடிகள் உள்ளன. இறுதி வாக்காளர் பட்டியல் அனைத்து தாசில்தார் அலுவலகங்களில் வாக்காளர்களின் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது. புதிதாக வாக்காளர் பட்டியலில் சேர்ந்த வாக்காளர்களுக்கு வாக்காளர் அடையாள அட்டை கட்டணம் இன்றி விரைவு தபால் மூலம் அனுப்பப்பட்டு வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.
இதில் மாவட்ட வருவாய் அதிகாரி தியாகராஜன், உதவி கலெக்டர்கள் ஹிருத்யா விஜயன், கார்த்திக் ராஜா, தஞ்சாவூர் வருவாய் கோட்டாட்சியர் நித்யா மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.



