தஞ்சாவூர், மே 28 –
தஞ்சாவூர் பெரிய கோவில் சிறிய கோட்டை மதில் சுவரில் வளர்ந்துள்ள செடிகள், மரங்கள் அகற்றும் தூய்மை பணியை தொடர்ந்து நடைபெற்று வந்த நிலையில் தொல்லியல் துறையில் உரிய அனுமதி கிடைக்காததால் பாதியிலேயே நிறுத்தப்பட்டது. இதனால் வரலாற்று ஆர்வலர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.
உலக பாரம்பரிய சின்னங்களில் ஒன்றான தஞ்சாவூர் பெரிய கோவிலை சுற்றியுள்ள அகழியில் பொதுமக்கள் நிதி உதவியுடன் மாவட்ட நிர்வாகம் தூய்மை பணியை மே 16ம் தேதி தொடங்கியது. பெரிய கோவிலை சுற்றி அகழியில் தூய்மை பணி கிட்டத்தட்ட நிறைவடைந்துள்ளது. இந்த நிலையில் கோவிலின் முன்பக்கம் உள்ள அகழியில் தற்காலிக மின் விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளதால், இரவு நேரத்தில் மின்னொளியில் பொலிவை பெற்றுள்ளது.
இதே போல, சிறிய கோட்டை மதில் சுவர், கொத்தளத்தில் வளர்ந்துள்ள செடிகள், புதர்கள், மரங்களை அகற்றுவதற்கான நடவடிக்கையை மாவட்ட நிர்வாகம் மேற்கொண்டது. இப்பணியில் முழு வீச்சில் நடை பெற்று வந்த நிலையில் இந்த தூய்மை பணியால் பிராதன சின்னங்களின் கட்டுமானம் பாதிக்கப்படும் என தொல்லியல் துறையினர் கூறியதால் பணி நிறுத்தப்பட்டதாக மாவட்ட நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.
இதுகுறித்து இந்திய தொல்லியல் துறை அலுவலர்கள் கூறியதாவது: கோட்டை சுவர்களில் உள்ள செடிகளை அகற்றுவதற்கான ஒப்பந்த புள்ளி ஏற்கனவே கோரப்பட்டு விட்டதாகவும், ஒரு மாத காலத்திற்குள் அப்பணி தொடங்கும் எனவும் தெரிவித்தனர். கோயிலைச் சுற்றியுள்ள அகழியின் தெற்கு மற்றும் மேற்கு பக்க சுவர்களில் வளர்ந்துள்ள செடிகள் கட்டுமானங்களுக்கு சேதத்தை விளைவிக்கின்றன. எனவே இதை சீரமைத்து பாதுகாப்பதற்கான பணிகளை இந்திய தொல்லியல் துறை உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என வரலாற்று ஆர்வலர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
இதுகுறித்து அழகிய தஞ்சை இயக்கத்தின் திட்ட இயக்குனர் ரவிச்சந்திரன் தெரிவித்ததாவது; தஞ்சாவூர் பெரிய கோயிலுக்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் வரும் நிலையில், இந்த புராதன சின்னத்தை பாதுகாக்கும் வகையில் சிறிய கோட்டை சுவர், கொத்தளம் போன்றவற்றை விரைவாக சீரமைக்க வேண்டும். இதற்காக மத்திய அரசு மிகப் பெரிய திட்டத்தை வகுத்து தனியாக நிதி ஒதுக்கீடு செய்து, வல்லுனர்கள் கொண்ட தனிக்குழுவை அமைத்து மேற்கொள்ள வேண்டும்.



