தஞ்சாவூர், ஜூன் 28 –
தஞ்சாவூர் புதிய பேருந்து நிலையம் கடந்த 1995-ஆம் ஆண்டு 8-வது உலகத் தமிழ் மாநாடு நடந்தபோது திறக்கப்பட்டது. அதன்பிறகு சீரமைப்பு பணிகள் நடைபெற்றன. தற்போது மிகவும் மோசமடைந்து இருப்பதால் மாநகராட்சி மேயர் சண். இராமநாதன் முயற்சியால் பல கோடி ரூபாய் செலவில் புணரமைப்பு பணிகள் செய்ய நிதி தமிழக அரசிடம் கேட்டுள்ளார். இதுகுறித்து சட்டசபையில் மானிய கோரிக்கையின் போது அமைச்சர் கே.என்.நேரு தஞ்சை புதிய பேருந்து நிலையம் சீரமைப்பு பணிகள் மேற்கொள்ள நிதி வழங்கப்படும் என்று அறிவித்தார்.
இதற்கு இடையில் அவசர பணிகள் ரூ. 2 கோடியே 50 லட்சம் செலவில் மேற்கொள்ளப்பட உள்ளது. இதுகுறித்து மாநகராட்சி மேயர் சண். இராமநாதன் புதிய பேருந்து நிலையம் மற்றும் ஆம்னி பேருந்து நிலையம் ஆகியவற்றில் ஆய்வு செய்தார். அப்போது செய்தியாளர்களிடம் கூறியதாவது : தஞ்சை புதிய பேருந்து நிலையத்தில் ரூபாய் 2 கோடியே 50 லட்சம் செலவில் சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது. திருச்சி மார்க்கமாக செல்லும் பேருந்துகள் ஆம்னி பேருந்து நிலையத்தில் இருந்து செல்லும். மாநகர பேருந்துகள் ஆம்னி பேருந்து நிலையம் அருகில் உள்ள பகுதிக்கு மாற்றப்படும்.
புதிய பேருந்து நிலையத்திற்குள் கார் மற்றும் இரு சக்கர வாகனங்கள் அனுமதிக்கப்படாது. அவைகள் புதிய பேருந்து சுற்றுச்சுவர் அருகே செல்ல வழி அமைத்து தரப்படும். பொதுமக்கள் கழிவறை வசதிகள் கேட்டுள்ளனர். இதுகுறித்து அலுவலர்களுடன் கலந்து ஆலோசித்து முடிவு எடுக்கப்படும் என கூறினார்.
மேயருடன் துணை மேயர் டாக்டர் அஞ்சுகம் பூபதி, மண்டலக் குழு தலைவர் கலையரசன் மாநகராட்சி ஆணையாளர் கண்ணன் மாநகராட்சி நல அலுவலர் டாக்டர் நமச்சிவாயம், உதவி செயற்பொறியாளர் மனோகரன், உதவி பொறியாளர் பிரதான் பாபு, சுகாதார ஆய்வாளர் ராமச்சந்திரன், தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக (கும்பகோணம் கோட்டம்) கோட்ட மேலாளர்கள் தமிழ்ச்செல்வன், ராஜேஷ், தஞ்சை கிளை மேலாளர்கள் பிரகாஷ், சந்தனராஜ், சரவணகுமார் மற்றும் பலர் உடன் இருந்தனர்.