தஞ்சாவூர், ஆக. 3 –
தஞ்சாவூர் அருகே வல்லம் செயின்ட் சேவியர் நடுநிலைப் பள்ளியில் நலம் காக்கும் ஸ்டாலின் திட்டம் மற்றும் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை அமைச்சர் கோவி செழியன் வழங்கினார். சென்னையில் முதல்வர் காணொலி காட்சி வாயிலாக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில் நலம் காக்கும் ஸ்டாலின் என்ற புதிய திட்டத்தை தொடங்கி வைத்தார்.
தஞ்சாவூர் அருகே வல்லம் செயின்ட் சேவியர் நடுநிலைப் பள்ளியில் நடந்த நலம் காக்கும் ஸ்டாலின் திட்ட முகாமிற்கு மாவட்ட கலெக்டர் பிரியங்கா பங்கஜம் தலைமை தாங்கினார். மக்களவை உறுப்பினர் ச. முரசொலி, சட்டமன்ற உறுப்பினர்கள் துரை. சந்திரசேகரன், டி.கே.ஜி. நீலமேகம், க. அன்பழகன், என். அசோக் குமார், மாநகராட்சி மேயர் சண். ராமநாதன், துணை மேயர் டாக்டர் அஞ்சுகம் பூபதி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
முகாமில் உயர் கல்வித் துறை அமைச்சர் கோவி செழியன் கலந்து கொண்டு பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி கூறியதாவது: முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் சென்னையில் நலம் காக்கும் ஸ்டாலின் திட்டத்தை காணொளி காட்சி மூலம் தொடங்கி வைத்தார். மக்களை தேடி மருத்துவம், இன்னுயிர் காப்போம், நம்மை காப்போம் 48 போன்ற திட்டங்களின் வரிசையில் நலம் காக்கும் ஸ்டாலின் திட்டம் என்ற முழு உடல் பரிசோதனை திட்டம் செயல்படுத்தப்பட்டு உள்ளது.
இந்த மருத்துவ முகாமில் அனைவருக்கும் ரத்த பரிசோதனை, இ.சி.ஜி, எக்ஸ்ரே உள்ளிட்ட பரிசோதனைகள் இலவசமாக செய்யப்பட்டன. மருத்துவர்களால் பரிந்துரை செய்யப்பட்டவர்களுக்கு அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன், எக்கோ கார்டியோகிராம், பெண்களுக்கான கர்ப்பப்பை வாய் மற்றும் மார்பக புற்றுநோய் பரிசோதனைகள் உள்ளிட்ட மருத்துவ நிபுணர்கள் கலந்து கொண்டு மருத்துவ சேவைகள் வழங்கப்படுகிறது இவ்வாறு அவர் கூறினார் .
முதல்வரின் மருத்துவ காப்பீட்டு அட்டை, மாற்றுத்திறனாளிகளுக்கான அடையாள அட்டை, தொழிலாளர் நல மற்றும் திறன் மேம்பாட்டு துறை சார்பில் அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு நல வாரிய அடையாள அட்டை ஆகியவை வழங்கினார். இந்த முகாமில் மாவட்ட வருவாய் அலுவலர் தியாகராஜன், தஞ்சாவூர் மருத்துவ கல்லூரி முதல்வர் பாலசுப்பிரமணியன், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை இணை இயக்குனர் அன்பழகன், மாவட்ட சுகாதார அலுவலர் கலைவாணி, மாநகர நல அலுவலர் நமச்சிவாயம், கோட்டாட்சியர் இலக்கியா, வல்லம் பேரூராட்சி தலைவர் செல்வராணி கல்யாணசுந்தரம் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.