தக்கலை, செப். 23 –
குமரி மாவட்டத்தில் கஞ்சா விற்பனை செய்பவர்கள் மற்றும் பயன்படுத்துபவர்கள் மீது போலீசார் கடும் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். தொடர்ந்து இது போன்ற செயல்களில் ஈடுபடுபவர்களை குண்டர் சட்டத்தில் கைது செய்வதோடு அவர்கள் வங்கி கணக்கு முடக்கப்பட்டு வருகிறது. பல்வேறு நடவடிக்கை காவல்துறை எடுத்து வந்தாலும் பல வழிகளில் கஞ்சா விற்பனை நடந்து வருகிறது.
இந்த நிலையில் தக்கலை அருகே வீட்டில் கஞ்சா செடி வளர்த்த வாலிபரை போலீசார் பிடித்த சம்பவம் நடைபெற்றுள்ளது. பருத்தியறை தோட்டம் பகுதியை சேர்ந்த அருள்தாஸ் மகன் அஜித் (26) கட்டிடத் தொழிலாளி. இவர் வீட்டில் கஞ்சா செடி வளர்த்து வருவதாக தக்கலை போலீசாருக்கு தகவல் கிடைத்தது. தக்கலை எஸ்ஐ இம்மானுவேல் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பார்த்தபோது வீட்டில் கஞ்சா செடி வளர்ப்பது உறுதி செய்யப்பட்டது.
இதை தொடர்ந்து அஜித்தை போலீசார் கைது செய்தனர். தொடர்ந்து அவரிடம் நடத்திய விசாரணையில் வேலைக்கு செல்லும் போது நாகர்கோவில் ரயில் நிலையத்தில் வைத்து இந்த கஞ்சா செடி கிடைத்ததாக கூறியுள்ளார். அவர் கூறுவது உண்மையா? என தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


