சேலம், ஜூலை 15 –
சேலம் சோனா கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் முதலாம் ஆண்டு மாணவர்களை வரவேற்கும் விதமாக 15.07.2026 புதன்கிழமை காலை 10 மணியளவில் கல்லூரியின் ஸ்ரீ வள்ளியப்பா கலையரங்க கூடத்தில் நடைபெற்றது. கல்லூரியின் முதலாம் ஆண்டு மாணவர்களை வரவேற்கும் விதமாக நடைபெற்ற இந்த விழா குத்துவிளக்கேற்றுதலில் துவங்கி இனிதே ஆரம்பமானது. கல்லூரியின் ஆங்கிலத்துறை தலைவர் முனைவர் ஜி.அனுராதா அனைத்து மாணவர்களையும் வரவேற்றார்.
கல்லூரியின் தலைவர் சொ.வள்ளியப்பா தலைமை வகித்தார். கல்லூரியின் துணைத் தலைவர்கள் சொக்கு வள்ளியப்பா, தியாகு வள்ளியப்பா ஆகியோர் முன்னிலை வகித்தனர். சோனா தொழில்நுட்பக் கல்லூரி முதல்வர் முனைவர். எஸ் . ஆர்.ஆர் செந்தில்குமார் மற்றும் தியாகராஜா பல்தொழில் நுட்பக் கல்லூரி, வள்ளியப்பா பப்ளிக் பள்ளியின் இயக்குநர் முனைவர். வி.கார்த்திகேயன் ஆகியோர் பாராட்டுரை வழங்கினர். கல்லூரியின் முதல்வர் முனைவர் கு.மை காதர் நவாஸ் முதலாம் ஆண்டு மாணவர்களையும் அவர்களின் பெற்றோர்களையும் வரவேற்று பேசினார்.
இந்நிகழ்வின் சிறப்பு விருந்தினராக வருகை புரிந்த ஜெய் கிருஷ்ணன் (Partner & Head of investments, Beyond Next Ventures, Bengaluru) பெற்றோர் மாணவர்களிடையே சிறப்புரை நிகழ்த்தினார். பள்ளி காலத்தில் இருந்து கல்லூரி வாழ்க்கைக்கு அடி எடுத்து வைக்கும் சிறப்பினையும், மாணவர்கள் எவ்வாறு தங்களது திறமைகளை மேம்படுத்திக் கொள்ள வேண்டும் என்பதையும் குறித்து பேசினார். கல்லூரியின் தலைவர் சொ.வள்ளியப்பா பேசும் பொழுது மாணவர்கள் கல்லூரி பருவத்தை நன்முறையில் அமைந்து கொண்டு பெற்றோர்களைப் பேணி பாதுகாக்க வேண்டும் என்று அறிவுரை வழங்கினார்.
இந்த நிகழ்வின் நிறைவாக உயிர்த்தொழில் நுட்பவியல் துறைத்தலைவர் முனைவர் எம்.புவனேஸ்வரி நன்றி உரை வழங்கினார். இந்நிகழ்ச்சியில் முதலாம் ஆண்டு மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் அனைவரும் பெருமகிழ்ச்சியுடன் கலந்துகொண்டு பெருமை சேர்த்தனர்.



