சேலம், ஜூலை 6 –
தமிழகத்தில் சாலை விபத்துகளை முற்றிலும் குறைக்க விபத்தில்லா பயணத்தை உருவாக்கிட பல்வேறு சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நடவடிக்கைகள் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்த வகையில் சேலம் மாவட்டத்தில் சாலை பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்த மாதாந்திர ஆய்வு கூட்டம் காவல்துறை, போக்குவரத்து துறை, வருவாய் துறை மற்றும் நெடுஞ்சாலைத்துறை உள்ளிட்ட அலுவலர்கள் மற்றும் அதிகாரிகளுடன் நடத்தப்பட்டது.
குறிப்பாக மனித உயிர்களின் முக்கியத்துவத்தை கவனத்தில் கொண்டு பொதுமக்களுக்கு சாலை பாதுகாப்பு பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்திடவும் விபத்துக்கள் மற்றும் உயிரிழப்புகளை தவிர்க்கும் பொருட்டு மாவட்ட நிர்வாகத்தால் தொடர் விழிப்புணர்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தொடர் சாலை விபத்துக்கள் ஏற்படும் இடங்களை கண்டறிந்து காவல்துறை, நெடுஞ்சாலை துறை, போக்குவரத்து துறை மற்றும் வருவாய் துறை உள்ளிட்ட துறை அலுவலர்கள் ஒருங்கிணைந்து ஆய்வு மேற்கொண்டு எதிர்வரும் காலங்களில் சாலை விபத்துகள் ஏற்படாமல் தடுக்கும் வழிமுறைகளை கண்டறிந்து நடவடிக்கை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அதேபோன்று சாலை விதிகளை மீறும் வாகன ஓட்டிகள் மீது நடவடிக்கை மேற்கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக சேலம் மாவட்டத்தில் வட்டார போக்குவரத்து அலுவலகங்கள் மூலம் ஜனவரி 2026 முதல் மே – 2026 வரை அதி வேகமாக வாகனம் ஓட்டுதல், தலைக்கவசம் அணியாமல் வாகனம் ஓட்டுதல், கைபேசி உபயோகித்துக்கொண்டு வாகனம் ஓட்டுதல், அதிக நபர்களை வண்டியில் ஏற்றி செல்தல், அதிக பாரங்களை வண்டியில் ஏற்றி செல்தல் ஆகிய குற்றங்களுக்காக 1874 நபர்களின் வாகன ஓட்டுனர் உரிமங்கள் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளது. இதில் மே மாதத்தில் மட்டும் 265 நபர்களின் வாகன ஓட்டுனர் உரிமங்கள் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளது.
இருசக்கர வாகனங்களில் செல்பவர்கள் ஹெல்மெட் அணிதல், நான்கு சக்கர வாகனங்களில் செல்பவர்கள் சீட் பெல்ட் அணிதல், நிர்ணயிக்கப்பட்ட வேகத்திற்குள் வாகனங்களை இயக்குதல், போக்குவரத்து விதிகளை வாகன ஓட்டிகள் கடைபிடிக்க வேண்டும் என கேட்டுக் கொள்ளப்படுகிறது. அதேபோன்று சாலை விபத்துகளை முற்றிலும் தடுக்கும் வகையில் அலுவலர்கள் சாலை பாதுகாப்பு குறித்து தொடர் விழிப்புணர்வு நடவடிக்கைகளை எடுத்து அதிக அளவிலான பொதுமக்கள் தெரிந்து கொள்ளும் வகையில் மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு மாவட்ட ஆட்சித் தலைவர் இளம் பகவத் தெரிவித்தார்.



