நாகர்கோவில், நவம்பர் 19 –
நாகர்கோவில் மாநகராட்சி பகுதியில் சாலைகளின் இருபுறமும் பொதுமக்கள் நடந்து செல்லும் வகையில் ஆக்கிரமிப்புகளை அகற்றி அலங்கார நடைபாதை அமைக்கப்பட்டு வருகிறது. கோட்டார் சவேரியார் கோயில் ஜங்ஷன் முதல் செட்டிகுளம் வரை உள்ள சாலையில் ஆக்கிரமிப்புகளை அகற்றி அலங்கார நடைபாதை அமைக்கும் பணி தொடங்கியது. ரூ.2 கோடி செலவிலான இந்த பணியை கடந்த சில நாட்களுக்கு முன்பு மேயர் மகேஷ் தொடங்கி வைத்தார். சாலையின் இருபுறமும் சுமார் 1200 மீட்டர் தூரத்திற்கு மழை நீர் வடிகால் அமைக்கும் பணி நடந்து வருகிறது. பணி முடிந்த இடங்களில் பொக்லைன் இயந்திரம் கொண்டு மண் போட்டு சாலை விரிவாக்கம் செய்யும் பணி நடந்து வருகிறது.
மழைநீர் வடிகால் பணி சுமார் 90 சதவீதம் முடிவடைந்த நிலையில், இன்று காலை மாநகராட்சி மேயர் அறிவுரையின்படி ஆணையர் நிசாந் கிருஷ்ணா பணிகளை ஆய்வு செய்தார். போக்குவரத்திற்கு இடையூறு இல்லாமலும் சவேரியார் கோயில் திருவிழா தொடங்குவதற்கு முன்பும் பணிகளை முடித்து கொடுக்க வேண்டும் என்று ஆணையர் உத்தரவிட்டார்.
இது குறித்து மாநகராட்சி அதிகாரி ஒருவர் கூறும் போது, சவேரியார் கோவில் ஜங்ஷன் முதல் செட்டிகுளம் வரை சாலை விரிவாக்க பணியுடன் மழைநீர் வடிகால் நடைபாதை அமைக்கும் பணி நடந்து வருகிறது. தற்போது இருபுறமும் மழைநீர் வடிகால் பணி நிறைவடையும் நிலையில் உள்ளது. முன்பு இருந்ததை விட 5 மீட்டர் அகலம் கூடுதலாக இந்த சாலை அமையும். சவேரியார் கோவில் திருவிழா தொடங்குவதற்கு முன்பு மழை நீர் வடிகால் பணிகள் முடிக்கப்பட்டு சாலை சமப்படுத்தப்படும். அதன் பிறகு மழைநீர் வடிகாலுக்கு மேல் காங்கிரீட் போட்டு அலங்கார கற்கள் பதிக்கப்படும் என்றார்.


