மார்த்தாண்டம், ஜூலை 8 –
கொல்லங்கோடு பகுதி சேர்ந்தவர் அருள் வின்சி ( 27), அதே பகுதி சேர்ந்த மீனா (27). இவர்கள் இருவரும் அந்த பகுதியில் உள்ள ஒரு நகைக்கடையில் வேலை பார்த்து வருகிறார்கள். சம்பவ தினம் இருவரையும் நகை அடகு கடை உரிமையாளர் தன வீட்டுக்கு வருமாறு அழைத்துள்ளார். அங்கு சென்ற பெண்களை நகை கடை உரிமையாளர் உட்பட 4 பேர் அறையில் அடைத்து வைத்துள்ளனர். தொடர்ந்து உரிமையாளரும் அவரது மகனும் சேர்ந்து இரண்டு பெண்களையும் தரக்குறைவாக திட்டி தாக்கியுள்ளனர்.
தொடர்ந்து நான்கு பேரும் சேர்ந்து அருள் வின்சி அணிந்திருந்த 15 பவுன் நகைகள், மீனா அணிந்திருந்த 9 பவுன் நகைகளை மிரட்டி பறித்ததாக தெரிகிறது. உடனடியாக பெண்கள் சத்தம் போட்டு உள்ளனர். உடனே அக்கம்பக்கத்தினர் அங்கு வந்து பெண்களை மீட்டு இது குறித்து கொல்லங்கோடு போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். ஆனால் போலீசார் நடவடிக்கை எடுக்கவில்லை என தெரிகிறது. இதையடுத்து நாகர்கோவிலில் மாவட்ட காவல் கண்காணிப்பாளரை சந்தித்து தங்களது நகையை மீட்டுத் தர வேண்டும் என பாதிக்கப்பட்ட பெண் பணியாளர்களான அருள் வின்சி, மீனா ஆகியோர் நேற்று புகார் மனு அளித்தனர்.