நாகர்கோவில், ஜூலை 27 –
நாகர்கோவிலில் சிறுநீரகம் பாதிக்கப்பட்ட போலீஸ்காரருக்கு மாற்று சிறுநீரகம் பெற்று தருவதாக ரூ.12 லட்சம் பெற்றுக் கொண்டு ஏமாற்றியதாக நர்ஸ் உட்பட 3 பேரிடம் விசாரிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.
நாகர்கோவில் வட்டவளை பகுதியைச் சேர்ந்த 29 வயதான போலீஸ்காரர் தற்போது மணிமுத்தாறு பட்டாலியன் பிரிவில் பணியில் இருக்கிறார். இவருக்கு சிறுநீரக பிரச்சனை இருந்து வந்தது. மருத்துவ பரிசோதனையில் மாற்று சிறுநீரகம் பொருத்த வேண்டும் என டாக்டர்கள் தெரிவித்தனர். இதற்காக முயற்சியில் போலீஸ்காரர் மற்றும் அவரது குடும்பத்தினர் இறங்கி இருந்தனர்.
இந்த நிலையில் நாகர்கோவிலில் உள்ள ஒரு பிரபல தனியார் மருத்துவமனையில் நர்சாக பணியாற்றும் பாக்கியபாய் என்பவர் மூலம் ராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணியை சேர்ந்த ரீகன் என்பவரின் தொடர்பு கிடைத்தது. அப்போது ரீகன் மாற்று சிறுநீரகம் பெற உதவி செய்வதாக உறுதி கூறி போலீஸ்காரிடமிருந்து ரூ. 12 லட்சம் பெற்றுள்ளார். பணத்தைப் பெற்று பல மாதங்கள் ஆன பின்னரும் இன்னும் சிறுநீரகம் பெற்றுக் கொடுக்கவில்லை. போலீஸ்காரர் உடல் நிலையும் பாதிப்புக்கு உள்ளாகி வந்துள்ளது.
இது குறித்து கேட்டபோது முறையான பதில் தெரிவிக்கவில்லை. இது தொடர்பாக தற்போது பாதிக்கப்பட்ட போலீஸ்காரர் கோட்டாறு காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இந்த புகாரின் பேரில் ரீகன் மற்றும் மதுரை பெருமாள் பகுதியை சேர்ந்த முகமது பாசில், நாகர்கோவிலை சேர்ந்த பாக்கிய பாய் ஆகிய 3 பேர் மீது கோட்டாறு போலீசார் மோசடி உள்ள பிரிவுகளில் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
மேலும் இது தொடர்பாக விசாரணை நடத்த கோட்டாறு இன்ஸ்பெக்டர் கண்ணன் தலைமையில் தனிப்படை போலீசார் நியமிக்கப்பட்டுள்ளனர். இதை அடுத்த 3 பேரையும் விசாரணைக்காக போலீஸ் நிலையம் அழைத்துள்ளனர். ஆனால் அவர்கள் தலைமறைவாகி உள்ளதாக கூறப்படுகிறது. விசாரணை நடத்தினால் தான் இந்த சம்பவத்தின் பின்னணி தெரியவரும் என போலீசார் கூறியுள்ளனர்.


