தஞ்சாவூர், ஜூன் 2 –
தஞ்சாவூரில் இந்து சமய அறநிலையத்துறை, தஞ்சாவூர் அரண்மனை தேவஸ்தானம் சார்பில் கரந்தை சப்தஸ்தானம் என்கின்ற ஏழூர் பல்லக்குத் திருவிழா தொடங்கியது. கரந்தை கருணாசாமி கோவிலில் வைகாசி விசாகப்பெருவிழா கொடியேற்றத்துடன் மே 21ம் தேதி தொடங்கியது. தொடர்ந்து, உற்ஸவங்கள் நடைபெற்று வந்த நிலையில் மே 29ம் தேதி தேரோட்டம் நடைபெற்றது.
இதைத்தொடர்ந்து சப்தஸ்தானம் என்கின்ற ஏழூர் பல்லக்கு திருவிழா திங்கட்கிழமை காலை தொடங்கியது. இதில் பெரிய நாயகி உடனாகிய கருணாசாமி என்கின்ற ஸ்ரீ வசிஷ்டேஸ்வரர் பெரிய கண்ணாடி பல்லக்கிலும், மணக்கோலத்தில் அருந்ததி தேவி உடனுறை ஸ்ரீ வசிஷ்ட மகரிஷி சிறிய வெட்டிவேர் பல்லக்கிலும் புறப்பாடு நடைபெற்றது.
இவ்விழாவில் தஞ்சாவூர் அரண் மனை தேவஸ்தான பரம்பரை அறங்காவலர் பாபாஜி ராஜா போன்சிலே, செயல் அலுவலர் சுந்தர்ராசு, கண்காணிப்பாளர் ரவி, மேற்பார்வையாளர்கள் ரமேஷ், ஆடிட்டர் ரவிச்சந்திரன், கயிலை ராமநாதன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இதையடுத்து வெண்ணாற்றங்கரை ஆனந்த வள்ளி உடனுறை தஞ்சபுரீஸ்வரர் கோயில், திட்டை சுகந்த குந்தாளரம்பிகை உடனுறை வசிஷ்டேஸ்வரர் கோயில், கூடலூர் ஸ்ரீ மீனாட்சி உடனுறை சொர்க்க நாதர்கோயில், புன்னைநல்லூர் மாரியம்மன் கோவில் கைலாசநாதர் கோயில் ஆகிய இடங்களுக்கு பல்லக்குகள் சென்றன.
இதைத் தொடர்ந்து செவ்வாய்க் கிழமை காலை புன்னைநல்லூர் மாரியம்மன் கோயில், கைலாச நாதர்கோயிலில் இருந்து புறப்பட்டு தஞ்சாவூர் கீழவாசல் ஸ்ரீ பாலாம்பிகை உடனுறை பூமாலை வைத்தியநாத சுவாமி கோயிலுக்கு பல்லக்குகள் வந்து சேரும்.
இதையடுத்து மேல வீதி கொங்கணேஸ்வரர் கோயிலுக்கு சென்று, மாலையில் கரந்தையில் உள்ள மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயிலுக்கு சென்று ஏமூர் பல்லக் குகளும், கருணாசாமி கோயிலுக்கு சென்றடையும். அங்கு சுவாமிக்கு பதுமை பூச்சாற்று நிகழ்வு (பொம்மை பூ போடுதல் ) மகா தீபாராதனை நடைபெற உள்ளது.



