நாகர்கோவில், ஜூலை 1 –
குமரி மாவட்ட கலெக்டர் அழகுமீனா வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு: பள்ளிகள், கல்லூரிகள், வணிக வளாகங்கள், திருமண மண்டபங்கள், உணவகம், ஓட்டல்கள், தொழிற்சாலைகள், சேவை நிறுவனங்கள் என்று அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள் அனைத்திலும் சுகாதாரம் முறையாக பேணப்படுகிறது என்று உறுதி செய்து அரசு சார்பில் பொது சுகாதாரத்துறை மூலம் சுகாதார சான்றிதழ் வழங்கப்பட்டு வருகிறது.
மேலும் பொதுமக்களின் ஆரோக்கியத்தை பாதுகாக்கும் வகையில் இந்த சான்றிதழ் கட்டாயமாக்கப்படுவதுடன் கால முறைப்படி புதுப்பிப்பும் மேற்கொள்ளப்பட வேண்டியது அவசியம் ஆகும். இனிவரும் காலங்களில் குமரி மாவட்டத்தில் சுகாதார சான்றிதழ் பெற விண்ணப்பங்களை இணையதளம் மூலம் மட்டுமே சமர்ப்பிக்க வேண்டும். சுகாதார சான்றிதழ் பெறுவதற்கான ஆன்லைன் வசதி தமிழ்நாடு அரசின் பொது மைய இணைய சேவை வாயிலாக நடைமுறைக்கு கொண்டுவரப்பட்டுள்ளது. இனி அனைத்து விண்ணப்பங்களும் https://www.tnesev ai.tn gov.in என்ற அரசு அதிகாரப்பூர்வ இணையதள முகவரி மூலமாக மட்டுமே சமர்ப்பிக்க வேண்டும்.
நேரடியாக தரப்படும் விண்ணப்பங்கள் ஏற்கப்படாமல் திருப்பி அனுப்பப்படும். தகுதியானவர்களுக்கு சுகாதார சான்றிதழ் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்படும். இதனை விண்ணப்பதாரர்கள் நேரடியாக பதிவிறக்கம் செய்து பயன்படுத்தலாம். சுகாதார சான்றிதழ் பெற்ற நிறுவனங்கள் அதன் பிரதியை எடுத்து தங்களது நிறுவனங்களில் காட்சிப்படுத்த வேண்டியது கட்டாயம். மேலும் சான்றிதழில் குறிப்பிடப்பட்டுள்ள அனைத்து சுகாதார நெறிமுறைகளும் முறையாக பின்பற்றப்பட வேண்டும். நெறிமுறைகளை மீறுவது ஆய்வின் போது கண்டறியப்பட்டால் சுகாதார சான்றிதழ் ரத்து செய்யப்படும். இவ்வாறு செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.