திருப்பூர், ஜூலை 19 –
திருப்பூரில் பா.ம.க. வடக்கு மற்றும் தெற்கு மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதற்கு மாநில பொருளாளர் சையத் மன்சூர் உசேன் தலைமை தாங்கினார். இதன் பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது: திருப்பூர் மாநகராட்சி முழுவதும் குப்பை மலைபோல் தேங்கியுள்ளது.
இதனை அகற்றும் விவகாரத்தில் மாநகராட்சி தோல்வி அடைந்துள்ளது. இதனால் மாநகராட்சி மேயர் தினேஷ்குமார் பதவி விலக வேண்டும். கவுன்சிலர்கள் மேயர் தினேஷ்குமார் மீது நம்பிக்கை இல்லாத தீர்மானம் கொண்டு வர வேண்டும். அவர் இல்லாத பட்சத்தில் வருகிற 22-ம் தேதி திருப்பூருக்கு தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் வரவுள்ள நிலையில், கருப்பு கொடி காட்டி போராட்டம் நடத்தப்படும்.
பா. ம.க.கட்சியில் உள்ள பிரச்சனை சிறிய பிரச்சனை தான். அது ஓரிரு நாட்களில் சீரடையும் என மருத்துவர் ராமதாஸ் தெரிவித்துள்ளார் . இருவரும் சேர்ந்து தான் தேர்தலை சந்திப்போம். பாமக இருக்கும் கூட்டணி தான் வெல்லும்.
நாங்கள் எந்த கூட்டணியிலும் இல்லை விரைவில் கூட்டணி குறித்து அறிவிப்பு வெளியாகும்.
தமிழகத்தில் அதிமுக தலைமையிலான கூட்டணி தான் உள்ளது. கூட்டணி ஆட்சி கிடையாது என எடப்பாடி பழனிச்சாமி சொல்கிறார். ஆனால் அமித்ஷா தமிழகத்தில் கூட்டணி ஆட்சி என்கிறார். அவருக்கு பதில் சொல்ல முடியாமல் எங்கள் தலைவர் அன்புமணிக்கு பதில் சொல்கிறார். இவ்வாறு அவர் கூறினார். இதில் தெற்கு மாவட்ட தலைவர் கோவிந்தராஜ், செயலாளர் மணிகண்ணன், வடக்கு மாவட்ட தலைவர் சரவணன், செயலாளர் ஜெயக்குமார் மற்றும் மாநில இளைஞரணி துணை செயலாளர் விஜயகுமார் தெற்கு மாநகர செயலாளர் தங்கராஜ் தொழிற்சங்க தலைவர் மயில்சாமி. வன்னியர் சங்க மாவட்ட செயலாளர் ராஜமாணிக்கம் மாவட்ட தலைவர் கண்ணன். மற்றும் பலர் கலந்து கொண்டனர்.