மார்த்தாண்டம், செப். 16 –
கிள்ளியூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தினை மாவட்ட ஆட்சித்தலைவர் அழகுமீனா, இன்று (16.09.2025) நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு தெரிவிக்கையில்: கன்னியாகுமரி மாவட்டம் கிள்ளியூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தினை ஆய்வு மேற்கொண்டு நோயாளிகளுக்கு வழங்கப்படும் சிகிச்சை முறைகள் குறித்து மருத்துவர்களிடம் கேட்டறியப்பட்டது. மருத்துவமனையின் வெளிநோயாளிகளை சந்தித்து அவர்களுக்கு வழங்கப்படும் மருத்துவ சிகிச்சைகள் குறித்து கேட்டறியப்பட்டது.
மேலும் மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளிடம் அக்கறையுடனும், பரிவுடனும் நடந்து கொண்டு சிகிச்சை அளிக்குமாறு மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. மேலும் பல் மருத்துவ பிரிவில் ஆய்வு மேற்கொண்டு, நோயாளிக்கு வழங்கப்படும் சிகிச்சை முறைகள் குறித்து மருத்துவரிடம் கேட்டறியப்பட்டது.
வாரம்தோறும் செவ்வாய்கிழமைகளில் கர்ப்பிணி பெண்களுக்கென்ற பிரத்தியேக நாள் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. கர்ப்பிணி தாய்மார்களுக்கு வழங்கப்படும் சிகிச்சையை முறைகள் குறித்தும், மேலும் அங்கு பதிவு செய்யப்பட்டுள்ள கர்ப்பிணி பெண்களின் எண்ணிக்கை, கர்ப்பிணி பெண்களுக்கு இரத்த சோகை வராமல் தடுப்பதற்கு இரும்புச்சத்து மாத்திரைகள் வழங்கப்படுகிறா என்பது குறித்தும் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களிடம் கேட்டறியப்பட்டது.
கர்ப்பிணி பெண்கள் அனைவரும் பயன்பெறும்படி, அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்களில் நடைபெறும் கர்ப்பகால பரிசோதனை தினங்களில் கண்டிப்பாக மருத்துவ பரிசோதனை மேற்கொள்ள வேண்டுமெனவும், இரும்பு சத்துக்கள் அதிகம் உள்ள உணவுகளை அதிகமாக சாப்பிடுவது மிகவும் அவசியம் எனவும் கர்ப்பிணி தாய்மார்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. இவ்வாறு மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்தார்.



