கிருஷ்ணகிரி, ஜுலை 16 –
கிருஷ்ணகிரி நகரில் அமைந்துள்ள தூய பாத்திமா அன்னை திருத்தலத்தின் 52-வது வருட திருத்தல தேர்திருவிழா ஜூலை 5-ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. நாள்தோறும் ஆலயத்தில் பங்கு தந்தையர்கள் தலைமையில் திருப்பலி பூஜைகளும், மறையுரைகளும் நிகழ்த்தப்பட்டது. அதனைத்தொடர்ந்து மாலை நேரங்களில் தேவாலயத்தை சுற்றி சிறிய தேர்பவனி நடைபெற்றது. தேர்திருவிழாவின் கடைசி நாள் காலை 8 மணிக்கு தருமபுரி மறைமாவட்ட ஆயர் மேதகு லாரன்ஸ் பயஸ் தலைமையில் ஆடம்பர கூட்டுத்திருபலி நடைபெற்றது. இதில் சிறுவர்களுக்கு புதுநன்மை மற்றும் உறுதி பூசுதல் ஆகிய திருவருட்சாதனங்கள் வழங்கப்பட்டன.
மாலை 7 மணியளவில் வண்ண வண்ண விளக்குகளாலும், மலர்களாலும் அலங்கரிக்கப்பட்ட அன்னையின் பெரிய தேர் தருமபுரி மறைமாவட்ட ஆவண காப்பாளர் அருட்திரு. சூசைராஜ் அவர்களால் மந்தரிக்கப்பட்டு நகரின் முக்கிய வீதிகள் வழியாக நகர் வலம் வந்தது. இந்த நிகழ்ச்சியில் கிருஷ்ணகிரி மாவட்டம் மட்டுமின்றி தமிழகத்தின்
பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் அண்டை மாநிலங்களான கர்நாடகா மற்றும்
ஆந்திராவிலிருந்தும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தங்களது
வேண்டுதல்கள் நிறைவேறியதற்காக திருத்தேரின் மீது உப்பு, மிளகு மற்றும்
மலர்களை தூவி நேர்த்திக்கடன் செலுத்தினர்.
மேலும் இந்த திருத்தல தேர் திருவிழாவில் காங்கிரஸ் நாடாளுமன்ற
உறுப்பினர் கோபிநாத், திமுக சட்டமன்ற உறுப்பினர் மதியழகன், அதிமுக
சட்டமன்ற உறுப்பினர் அசோக் குமார், தேசியவாத மக்கள் கட்சியின் மாவட்ட
தலைவர் சந்திரமோகன், நகர மன்ற உறுப்பினர் மருத்தவர் சுரேஷ்குமார்
உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டு அன்னையை வழிபட்டனர்.