கிருஷ்ணகிரி, ஜூலை 17 –
கிருஷ்ணகிரி மாவட்டம், வேப்பனஹள்ளி ஒன்றியத்திற்குட்பட்ட குருபரப்பள்ளி அரசு மேல்நிலைப்பள்ளியில் இரு கைகளை இழந்த மாற்றுத்திறனாளி மாணவர் கீர்த்திவர்மா பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வில் (கணிதம் உயிரியல் பிரிவு) 471 மதிப்பெண்கள் பெற்றதையடுத்து மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் உத்தரவின் பேரில் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை, மாற்றுத்திறனாளிக்கான உதவித் தொகை உள்ளிட்டவைகள் வழங்கப்பட்டது. மேலும், இம்மாணவன் வீட்டிலிருந்த படிக்க வேண்டும் என கோரிக்கை வைத்ததையடுத்து தற்போது சென்னையில் சிவசுப்பிரமணிய நாடார் பொறியியல் கல்லூரியில் கனிணி பொறியியல் படிப்பில் சேர்க்கப்பட்டுள்ளது.
மேலும், மாணவன் கீர்த்திவர்மன் குடும்பத்தினருக்கு சொந்தமாக வீடு இல்லாததால் இலவச வீட்டுமனை பட்டா வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்ததையடுத்து தற்போது அவர்கள் வசித்து வரும் மாரசந்திரம் தரப்பு ஜீனூர் கிராமத்திலேயே இலவச வீட்டுமனை (1.50 சென்ட்) பட்டாக்கான ஆணை வழங்கப்பட்டது. தொடர்ந்து அவர்களுக்கு வழங்கப்பட்ட வீட்டுமனை பட்டாவில் கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் வீடு கட்ட ஆணை வழங்கப்பட்டு வீடு கட்டுவதற்கான பணிகள் துவக்கி வைக்கப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சித்தலைவர் ச. தினேஷ் குமார் அவர்கள் தெரிவித்தார்.
இந்நிகழ்வில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் கவிதா, வட்டாட்சியர் சின்னசாமி, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சிராஜ்உதின், சதீஸ்பாபு, உதவி செயற்பொறியாளர் சுப்ரமணி, உதவி பொறியாளர் மணிவண்ணன் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் உடனிருந்தனர்.



