மார்த்தாண்டம், நவ. 25 –
கன்னியாகுமரி மாவட்டத்தில் காங்கிரஸ் மூன்று மாவட்ட தலைவர் பதவிக்கு தலா 6 பேர் பட்டியலை தலைமைக்கு கொடுக்க உள்ளோம். ஒரு மாதத்தில் தலைமை அறிவிக்கும் என்று அகில இந்திய காங். கமிட்டி பார்வையாளர் அனில் போஸ் தெரிவித்தார்.
கன்னியாகுமரி மாவட்ட தேர்தல் பார்வையாளராக ஆலப்புழையைச் சேர்ந்த வக்கீல் அனில் போஸ் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் இன்று குமரி மாவட்டம் வருகை தந்தார். குழித்துறை காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:- காங்கிரஸ் தற்போது பல இடங்களில் தோல்வி அடைந்து வருகிறது. இதற்கு பல காரணங்கள் உண்டு.
ஓட்டு குளறுபடி, தகுதியான ஓட்டு நீக்கம், தகுதி இல்லாத ஓட்டுகள் சேர்க்கப்படுகிறது, ஓட்டு திருட்டு, தேர்தல் கமிஷனின் பாரபட்சம் என சொல்லிக் கொண்டே செல்லலாம்.
இதையெல்லாம் கண்டுபிடிப்பதற்கு கேட்பதற்கு கட்சி பலமாக இருக்க வேண்டும்.
என்ன தவறு நடந்தாலும் தட்டிக் கேட்க வேண்டும். அதற்கு கட்சியின் அமைப்பு பலமாக இருக்க வேண்டும். இதனால் காங்கிரசின் அமைப்பை புனரமைக்க தீர்மானிக்கப்பட்டது. தமிழகத்தில் கடந்த 22ம் தேதி முதல் இதற்கான பணி ஆரம்பிக்க பட்டது. அனைத்து மாவட்டங்களிலும் பார்வையாளர்கள் அங்கு சென்று பணியை துவக்கி உள்ளனர்.
இங்கு ராஜேஷ் குமார், தாரகை கட்பட், பிரின்ஸ் போன்ற எம்எல்ஏக்கள் மாவட்ட தலைவர் டாக்டர் பினுலால் சிங் போன்ற பெரிய தலைவர்கள் உள்ளனர். இவர்களுக்கு ராகுல் காந்தி முதல் கீழ் உள்ள அனைத்து தலைவர்களையும் பழக்கம் உள்ளது.
இதனால் இந்த தலைவர்கள் எழுதித்தரும் பட்டியலை நான் வாங்கிக் கொண்டு செல்வேன் என்று யாரும் நினைக்க வேண்டாம்.
குமரி மாவட்டத்தில் கிழக்கு, மேற்கு, நாகர்கோவில் கார்ப்பரேஷன் தலைவர் பதவிக்கு 6 பேர் பட்டியலை தயார் செய்ய உள்ளோம். அதில் ஒருவர் எஸ்சி சமுதாயத்தைச் சேர்ந்தவரும், ஒருவர் பெண்ணாகவும் இருக்க வேண்டும். இவர்களது தகுதி அனைத்து விதத்திலும் ஆய்வு செய்யப்படும்.இப்போதைய தலைவருக்கு நிர்வாகிகள் நல்ல கருத்துக்கள் கொடுத்தால் அந்தப் பெயரும் சேர்க்கப்படும்.
6 பேர் பட்டியலை கொடுத்து விட்டால் மாநில தலைவர் இந்த மாவட்டத்தின் பொறுப்பாளர், மாநில பயிற்சி கொடுக்கும் துறையை சேர்ந்தவர்கள் ஆலோசித்து மீண்டும் மறு பரிசீலனை செய்வார்கள்.
பின் பட்டியல் குறைக்கப்பட்டு அகில இந்திய தலைமைக்கு அனுப்பப்படும் பின் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி தலைவர் மல்லிகார்ஜுனா கார்கே, எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, வேணுகோபால் எம் பி ஆகியோர் சேர்ந்து பட்டியலை அறிவிப்பார்கள்.
இவ்வாறு அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி பார்வையாளர் அனில் போஸ் கூறினார்.
எம் எல் ஏக்கள் ராஜேஷ் குமார் தாரகை கட்பட், பிரின்ஸ், மேற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் டாக்டர் பினுலால் சிங், ராஜீவ் காந்தி பஞ்சாயத்து ராஜ் மாவட்ட தலைவர் அஜிகுமார், மாவட்டச் செயலாளர் டாக்டர் தம்பி விஜயகுமார், ஓ பி சி பிரிவு மாவட்ட தலைவர் ஸ்டூவர்ட், விளவங்கோடு பஞ்சாயத்து முன்னாள் தலைவர் லைலா ரவிசங்கர், மேல்புறம் ஒன்றிய தலைவர் ரவிசங்கர், மாநில பொதுச் செயலாளர் பால்ராஜ் உட்பட பலர் உடன் இருந்தனர்



