இரணியல், பிப். 7 –
இரணியல் பேரூராட்சி கவுன்சிலர் கொலை மிரட்டல் விடுத்ததாக பேரூராட்சி தலைவர் இரணியல் காவல் நிலையத்தில் கொடுத்த புகார் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இரணியல் பேரூராட்சியில் தலைவராக இருந்து வருபவர் இரணியலை சேர்ந்த ஸ்ரீகலா முருகன். இவர் இரணியல் காவல் நிலையத்தில் ஒரு புகார் மனு கொடுத்துள்ளார். அந்த மனுவில் கூறியிருப்பதாவது: இரணியல் பேரூராட்சியில் ஆழ்வார்கோயில் பகுதியை சேர்ந்தவர் வார்டு கவுன்சிலர் ஆக இருந்து வருகிறார். இவர் பேரூராட்சியில் தவறான வேலைகளை செய்யும்படி என்னையும், செயல் அலுவலரையும் கட்டாயப்படுத்தி வருகிறார். அதை செய்ய மறுப்பதால் எங்களை மிரட்டுகிறார்.
கடந்த 6ம் தேதி மதியம் அவருடைய வார்டு மற்றும் 3ம் வார்டில் உள்ள வேலைகளை உடனடியாகவும் முறைகேடாகவும் செய்யுமாறு எனது கணவரிடம் செல்போனில் தொடர்பு கொண்டு பேசினார். எனது கணவர் பேரூராட்சி தொடர்பான வேலைகளை என்னால் பேச முடியாது. தலைவர் மற்றும் செயல் அலுவலரிடம் பேசும்படி கூறி உள்ளார். அப்போது அவரையும் என்னையும் மிரட்டி உள்ளார். இதனால் எனது கணவர் போனை துண்டித்து விட்டார்.
பின்னர் நானும் எனது கணவரும் பேரூராட்சி அலுவலகத்திற்கு முன்புள்ள ரோட்டில் இசக்கி அம்மன் கோவிலுக்கு முன்பாக கட்சி பொறுப்பாளர்களிடம் பேசிக் கொண்டிருந்தோம். அப்போது பைக்கில் வந்த அவர் எங்களுக்கு முன்பாக வந்து என்னை பார்த்து அவதூறாக பேசி என்னுடைய வேலையை செய்ய மாட்டாயா என்று அவதூறாக பேசி என்னை தாக்க முற்பட்டார்.
எனது கணவர் தடுக்கவே எனது கணவரை தாக்கி கொலை மிரட்டல் விடுத்தார். கட்சி பொறுப்பாளர்கள் ஏன் இவ்வாறு செய்கிறீர்கள் என கேட்டதற்கு கொலை மிரட்டல் விடுத்த அவர் அங்கிருந்து சென்று விட்டார். எனவே அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு கூறியிருந்தார். இந்த மனு சம்பந்தமாக இரணியல் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்


