நாகர்கோவில், ஏப். 3 –
இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தலின்படி, வரும் சட்டமன்ற பொதுத்தேர்தலில் 100 சதவீதம் வாக்களிப்பதை வலியுறுத்தி பல்வேறு தேர்தல் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
அதன் ஒரு பகுதியாக, கன்னியாகுமரி அய்யன் திருவள்ளுவர் வெள்ளிவிழா நினைவு வளைவு அருகில் மாவட்ட தோட்டக்கலைத்துறையின் சார்பில் காய் மற்றும் கனி வகைகளை கொண்டு உருவாக்கப்பட்ட தேர்தல் விழிப்புணர்வு கண்காட்சியினை மாவட்ட ஆட்சித்தலைவர் அழகுமீனா மற்றும் கன்னியாகுமரி சட்டமன்ற தொகுதி தேர்தல் பொதுப்பார்வையாளர் சுபஸ்ரீ நந்தா ஆகியோர் பார்வையிட்டு பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகளிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தினார்கள்.
அதனைத்தொடர்ந்து மாவட்ட ஆட்சித்தலைவர் அழகுமீனா கூறியதாவது: மக்கள் வாக்குச்சாவடிகளுக்கு ஆர்வமாக சென்று தங்களது வாக்குகளை பதிவு செய்து ஜனநாயக கடமையை ஆற்ற வேண்டும் என்பதை வலியுறுத்தி பல்வேறு தேர்தல் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் நடத்தப்பட்டு வருகின்றது.
இவ்விழிப்புணர்வு நிகழ்ச்சியின் நோக்கம் கன்னியாகுமரி மாவட்டம் கல்வி, இயற்கை வளம் உள்ளிட்டவற்றில் பிற மாவட்டங்களுக்கு முன்னோடியாக திகழ்வது போல் வாக்களிப்பதிலும் நமது மாவட்டம் முன்னோடி மாவட்டமாக திகழ வேண்டும் என்ற ஒற்றை நோக்கே ஆகும்.
அந்த வகையில் கன்னியாகுமரி அய்யன் திருவள்ளுவர் வெள்ளிவிழா நினைவு வளைவு அருகில் மாவட்ட தோட்டக்கலைத்துறையின் சார்பில் நாம் அன்றாடம் உட்கொள்ளும் கேரட், பீட்ரூட், முள்ளங்கி, தர்பூசணி, பூசணிக்காய், முலாம் பழம், அலங்கார பூச்செடிகள், காக்டெக்ஸ் செடி உள்ளிட்ட காய், கனி மற்றும் செடி வகைகளை கொண்டு உருவாக்கப்பட்ட தேர்தல் விழிப்புணர்வு கண்காட்சியானது பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகளை மிகவும் கவரும் வகையில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.
வாக்குரிமை பெற்ற அனைவரும் வரும் 23-ம் தேதியன்று மறவாது வாக்குச்சாவடிக்கு சென்று வாக்களித்து நமது ஜனநாயக கடமையை ஆற்ற வேண்டும் என்பதோடு கன்னியாகுமரி மாவட்டம் 100 சதவீதம் வாக்களித்த மாவட்டமாக திகழ வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன் என கூறினார்.
நடைபெற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சியில் தோட்டக்லைத்துறை துணை இயக்குநர் நக்கீரன், துறை அலுவலர்கள், பொதுமக்கள், சுற்றுலா பயணிகள் உட்பட பலர் கலந்து கொண்டார்கள்.



