ஈரோடு, ஆக. 24:
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வழங்கப்படும் இலவச வேஷ்டி, சேலை உற்பத்திக்குத் தேவையான நூல்களை உடனடியாக விடுவிக்கவும், புதிய வடிவமைப்புக்கு ஏற்ப கூலி உயர்வை அறிவிக்கவும் தமிழ்நாடு விசைத்தறி சங்கங்களின் கூட்டமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.
இதுதொடர்பாக ஈரோட்டில் கைத்தறித் துறை உதவி இயக்குநரிடம் கூட்டமைப்பினர் கோரிக்கை மனு அளித்தனர். மாநிலத் தலைவர் எல்.கே.எம். சுரேஷ், மாநில பொருளாளர் கே. பாலசுப்பிரமணியம் தலைமையில் பல்வேறு விசைத்தறி சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
இத்திட்டத்திற்கான அரசாணை கடந்த ஜூலை 1-ஆம் தேதி வெளியிடப்பட்டு, முதற்கட்டமாக ரூ.300 கோடி நிதி ஒதுக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், 50 நாட்களுக்கும் மேலாகியும் நூல் டெண்டர் பணிகள் நிறைவடையாமல், கூட்டுறவு நூற்பாலைகளில் இருந்து நூல் விடுவிக்கப்படவில்லை என அவர்கள் தெரிவித்தனர்.
இதனால் கடந்த இரண்டு மாதங்களாக வேலைவாய்ப்பின்றி நெசவாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், உடனடியாக நூல் விடுவித்து உற்பத்தியை தொடங்குவதுடன், புதிய வடிவமைப்புக்கு ஏற்ப கூலி உயர்வையும் அறிவிக்க வேண்டும் என விசைத்தறி சங்கங்களின் கூட்டமைப்பினர் வலியுறுத்தினர்.



