ஈரோடு, ஆகஸ்ட் 3 –
பெருந்துறை கொங்கு பொறியியல் கல்லூரி வளாகத்தில் கொங்கு இயற்கை மற்றும் யோகா மருத்துவக்கல்லூரி மற்றும் மருத்துவமனை கடந்த 2020-2021 கல்வி ஆண்டில் கொங்கு வேளாளர் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி ட்ரஸ்ட் மூலம் தமிழக அரசால் அங்கீகரிக்கப்பட்டு செயல்படுகிறது. தமிழ் நாடு டாக்டர் எம்.ஜி.ஆர் மருத்துவ பல்கலைக் கழகத்தின் கீழ் இணைக்கப்பட்டு 100 மாணவர்கள் பயிலும் வகையில் உலகதரம் வாய்ந்த ஆய்வகங்கள், 5000 க்கும் மேல் புத்தகங்கள் அடங்கிய நூலகம், 100 படுக்கை வசதி கொண்ட மருத்துவமனை போன்ற சகல வசதிகளுடன் இயற்கை மற்றும் யோகா என்னும்
5 1/2 ஆண்டிற்கான இளங்கலை மருத்துவப் பட்டப்படிப்பு ஆரம்பிக்கப்பட்டு சிறப்பாக நடைபெற்று வருகிறது.
இக்கல்லூரியில் அமைந்துள்ள மருத்துவமனையில் தினமும் 100-க்கும் மேற்பட்ட வெளிநோயாளிகள் பல பகுதிகளில் இருந்து வந்து மருத்துவரை அணுகி மருத்துவ ஆலோசனையையும், இயற்கை மற்றும் யோகா முறை சிகிச்சைகளையும் பெற்று பயன்பெற்று வருகின்றனர். மிகக் குறைந்த கட்டணத்தில் இந்த சேவையை மருத்துவமனை மூலமாக அறக்கட்டளை செய்துவருகிறது.
தற்போதய சூழலில் வாழ்வியல் மாற்றத்தால் ஏற்படும் நோய்கள் சமுதாயத்தில் அதிக அளவில் காணப்படுவதாலும் அதை குணப்படுத்தும் மகத்துவம் இந்த இயற்கை மருத்துவத்திற்கு இருப்பதாலும் கடந்து சில ஆண்டுகளாக மாணவர்கள் அதிகமாக இம்மருத்துவப்படிப்பினை தேர்வுசெய்து பயின்று வருகின்றனர். கடந்த கல்வி ஆண்டில் அரசு மற்றும் நிர்வாக இடஒதுக்கீட்டின் கீழ் ஒதுக்கப்பட்ட அனைத்து இடங்களும் கலந்தாய்வின் மூலம் நிரப்பப்பட்டு ஏராளமான மாணவர்கள் இக்கல்லூரியில் சேர்ந்து பயின்று வருகின்றனர்.
தற்போது 2025-2026 கல்வி ஆண்டின் சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் கடந்த 1 ந் தேதி வரை வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் இப்போது வருகிற 8 ந் வரை விண்ணப்பிக்க கால அவகாசம நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி மருத்துவ படிப்பிற்கு நீட் மதிப்பெண் தேவை இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. எனவே மாணவர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி இந்த மருத்துவபடிப்பில் சேர்ந்து படித்து பயன்பெறலாம் என்று இந்த கல்லூரியின் தாளாளர் வெங்கடாச்சலம், முதல்வர் மருத்துவர் பிரதாப் சிங் ஆகியோர் தெரிவித்து உள்ளனர்.