மார்த்தாண்டம், ஜூலை 14 –
தமிழ்நாட்டின் முதல்வராக மு.க. ஸ்டாலின் பொறுப்பேற்ற பின் இந்து அறநிலையத்துறையின் கீழ் பல நூற்றாண்டுகளாக கும்பாபிஷேகம் நடத்தப்படாமல் இருந்த பல்வேறு கோவில்களுக்கு கும்பாபிஷேகம் நடத்தப்பட்டு வருகிறது. 108 வைணவ திருத்தலங்கள் ஒன்றான திருவட்டார் ஆதிகேசவ பெருமாள் திருகோவிலில் 418 ஆண்டுகளுக்குப் பின் கடந்த ஆண்டு கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. இதுபோன்று பல ஆண்டுகளாக கும்பாபிஷேகம் நடைபெறாமல் இருந்த மண்டைக்காடு அருள்மிகு பகவதி அம்மன் திருக்கோவில், திருவிதாங்கோடு மகாதேவர் ஆலயம் உள்ளிட்ட பல்வேறு கோவிலுக்கு கும்பாபிஷேகம் நடத்தப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் குமரி மாவட்டத்தில் பழமை வாய்ந்த புகழ் பெற்ற அதங்கோடு கறச்சிவிளை ஶ்ரீ கண்ட சாஸ்தா கோவிலில் 14 வருடங்களுக்கு பின் நேற்று அஷ்டபந்தன மஹா கும்பிஷேகம் வெகு விமரிசையாக நடைபெற்றது. முன்னதாக கடந்த 7 ம் தேதி முதல் 12 ம் தேதி வரை காலை மாலை என நடை நடைத்திறக்கப்பட்டு கணபதி ஹோமம், தேவ பிரசன்ன பரிகார பூஜைகள், கலசபிசேகத்துடன் உச்ச பூஜைகள் என கும்பாபிஷேக சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. நேற்று காலை நடை திறக்கப்பட்டு மேள தாளம் முழங்க முன்னதாக தெய்வங்கள் கோவில்களில் கும்பாபிசேகம் நிகழ்ந்தன.
அதனை தொடர்ந்து பூஜிக்கப்பட்ட நீரை கண்ட சாஸ்தா கோவில் கோபுரத்தில் அமைப்பட்ட மூன்று கும்பத்தில் ஊற்றி கும்பாபிசேகம் நடத்தினர். தொடர்ந்து சிறப்பு பூஜையும், தீபாராதனையும், அதனை தொடர்ந்து கும்பாபிஷேக வாழ்தரங்கம் நடைபெற்றது. இதில் ஶ்ரீ சைதன்யானந்தஜி மகராஜ், அறங்காவலர் குழு தலைவர் பிரபா ஜி. ராமகிருஷ்ணன் மற்றும் உறுப்பினர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர். கன்னியாகுமரி மாவட்டத்தில் இருந்து மட்டுமல்லாமல் அண்டை மாநிலமான கேரளாவில் இருந்தும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.