தருமபுரி, ஜுலை 5 –
தருமபுரி மாவட்டம் அதகபாடியில் ரூ.1.20 கோடி மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டுள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலைய கட்டிடத்தை காணொளி காட்சி மூலமாக முதலமைச்சர் திறந்து வைத்தார். இதை தொடர்ந்து புதிதாக திறக்கப்பட்டுள்ள அதகப்பாடி அரசு ஆரம்ப சுகாதார நிலைய கட்டிடத்தில் மாவட்ட ஆட்சித் தலைவர் சதீஷ் குத்துவிளக்கு ஏற்றி பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார். பின்னர் அவர் பொது மக்களுக்கு இனிப்பு வழங்கினார். இந்த நிகழ்ச்சிக்கு நாடாளுமன்ற உறுப்பினர் ஆ. மணி, சட்டமன்ற உறுப்பினர் எஸ்.பி. வெங்கடேஸ்வரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இந்த நிகழ்ச்சியில் தாய்மார்களுக்கு தாய், சேய் நல பெட்டகத்தினை மாவட்ட ஆட்சித் தலைவர் வழங்கினார். மேலும், அவர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் மரக்கன்றுகளை நட்டு வைத்தார். தொடர்ந்து புதிதாக திறக்கப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலைய கட்டிடத்தில் மருத்துவர்கள், பொதுமக்களுக்கு மருத்துவ பரிசோதனைகள் செய்தனர். இந்த மருத்துவமனையில் 24/7 மணி நேரமும் நாய்க்கடி, பாம்பு கடிகளுக்கு விஷம் முறிவு பிரிவு இயங்கும். இதனை பொதுமக்கள் பயன்படுத்தி கொள்ள வேண்டுமென்று ஆட்சியர் தெரிவித்தார். மருத்துவ பணிகள் இணை இயக்குனர் டாக்டர். சாந்தி, சுகாதாரப் பணிகள் துணை இயக்குனர் பூபேஸ், முன்னாள் எம்எல்ஏ தடங்கம் சுப்பிரமணி உள்ளிட்ட மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் பணியாளர்கள் கலந்து கொண்டனர்.