ராஜாக்கமங்கலம், அக் : 13
வெள்ளிச்சந்தை அருகே உள்ள பேயோட்டுப் பகுதியில் இயங்கி வரும் டாஸ்மாக் பாரில் ஏற்பட்ட தகராறில் இரு தரப்பினர் பயங்கரமாக மோதிக் கொண்டனர். இதில் பார் உரிமையாளர் உள்பட 5 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
வெள்ளிச்சந்தை அருகே உள்ள ஈத்தங்காடு பகுதியைச் சேர்ந்தவர் ரமேஷ் (55), கேபிள் வேலை செய்து வருகிறார். அதே பகுதியைச் சேர்ந்தவர் நாகராஜன் (42). மணவாளக்குறிச்சி அருகே கல்லடிவிளையைச் சேர்ந்தவர் சுரேஷ்குமார் (45). இவர்கள் மூவரும் நண்பர்கள் ஆவர்.
பேயோட்டுப் பகுதியில் உள்ள டாஸ்மாக் கடையில், சுரேஷ்குமார் பெயரில் பார் உரிமம் பெற்று, அதனை ரமேஷ் மற்றும் நாகராஜன் நடத்தி வந்ததாகக் கூறப்படுகிறது. இதற்கிடையே பாரில் நாகராஜன் தனச்சையாக குடிநீர் பாட்டிலில் விற்பனை செய்து வந்ததாகத் தெரிகிறது.
இதனை அறிந்த ரமேஷ், நாகராஜனுடன் தகராறு செய்து வந்துள்ளார். கடந்த 11-ம் தேதி இரவு பார் மூடியபிறகு அவர்களுக்குள் மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது. நாகராஜன், சுரேஷ்குமார் மற்றும் சிலர் சேர்ந்து ரமேஷைத் தாக்கினர். ரமேஷ் தரப்பினர் தாக்கியதில் நாகராஜன் காயம் அடைந்தார்.
இதையடுத்து ரமேஷ் நாகர்கோவிலில் உள்ள தனியார் மருத்துவமனையிலும், நாகராஜன் குளச்சல் அரசு மருத்துவமனையிலும் சிகிச்சை பெற்றனர். மேலும் இதுகுறித்து ரமேஷ், நாகராஜன் தனித்தனியே வெள்ளிச்சந்தை காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன்பேரில் போலீசார் இருதரப்பினர் மோதல் தொடர்பாக ரமேஷ், நாகராஜன், சுரேஷ்குமார் உள்பட 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதனிடையே நேற்று வெள்ளிச்சந்தை எஸ்.ஐ. சண்முக கார்த்திகேயன் தலைமையில் போலீசார் பேயோட்டில் உள்ள டாஸ்மாக் பாருக்கு சென்று திடீர் ஆய்வு செய்தனர். அப்போது பார் உரிமத்தை பார்வைக்கு வைக்கப்படவில்லை.
மேலும் அதிகளவில் குடிநீர் பாட்டில்கள் இருந்தது மற்றும் தீத்தடுப்பு கருவிகள் இல்லாதது போன்ற குறைகள் இருப்பதை போலீசார் கண்டறிந்தனர். இதையடுத்து உரிய விதிமுறையை கடைபிடிக்காத பார் உரிமையாளர் சுரேஷ்குமார் மீது போலீசார் மற்றொரு வழக்குப்பதிவு செய்தனர்.


