விளாத்திகுளம், மார்ச் 07 –
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள மேல்மாந்தை ஊராட்சிக்கு இ.வேலாயுதபுரம் கிராமத்தில் வசிக்கும் 110 ஆதி திராவிட குடும்பத்தினருக்கு 1996-ம் ஆண்டு அப்போதைய முதல்வர் கலைஞர் கருணாநிதியினால் கிராமத்தின் வடக்கு – கிழக்கு பகுதியில், ஒவ்வொரு குடும்பத்திற்கும் தலா 3 சென்ட் நிலம் வழங்கப்பட்டது. வழங்கபட்ட வீட்டுமனை ஒப்படை செய்யும் உத்தரவு படிவத்தை வைத்து 110 குடும்பத்தினரும் வீடுகள் கட்டி வாழ்ந்து வந்தனர்.
இந்நிலையில் தற்போது அந்த இடத்தில் பழுதடைந்து வீடுகளை இடித்து புதிய வீடு கட்டுவதற்கு முறையான இடத்துக்கு உண்டான பட்டா இல்லாமலும், புதிய வீடு கட்டுவதற்கான மின் இணைப்பு வாங்க முடியாமலும் அப்பகுதி மக்கள் பெரும் இன்னலுக்கு ஆளாகி வருகின்றனர்.
பலர் சொந்த இடம் இருந்தும், அதற்கு முறையான பட்டா இல்லாத காரணத்தினால் அதை உபயோகிக்க முடியாமல் விவசாய நிலங்களிலும் கிராமத்திற்குள் வாடகை வீடு எடுத்து வசிக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.
இரண்டு தலைமுறைகளுக்கு மேலாக உள்ள இடத்தினை எங்களால் அனுபவிக்க முடியாமல் ஏட்டு சுரக்காய் கறிக்கு உதவாது என்பது போல் நிலமிருந்தும் அதை பயன்படுத்த முடியாமல் தவித்து வருவதாகவும், இடத்திற்கான முறையான பட்டா வழங்குமாறு அப்பகுதியினர் கடந்த 30 ஆண்டுகளாக வட்டாட்சியர் அலுவலகம், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், முதலமைச்சர் தனிப்பிரிவு,மக்கள் பிரதிநிதிகள் என அனைவரிடமும் கோரிக்கை வைத்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்ற குற்றச்சாட்டுகளை முன்வைக்கின்றனர்.
எனவே அரசினால் வழங்கப்பட்ட இடங்களுக்கு முறையான பட்டா வழங்காவிட்டால் வருகின்ற 2026 சட்டமன்றத் தேர்தலை புறக்கணித்து ஆதார் கார்டு மற்றும் ரேஷன் கார்டுகளை வட்டாட்சியர் அலுவலகத்தில் ஒப்படைக்க உள்ளதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.



