திருப்பத்தூர், அக். 1:
வாணியம்பாடி அருகே டிப்பர் லாரி மீது இருசக்கர வாகனம் மோதி ஏற்பட்ட விபத்தில், கல்லூரி மாணவர் ஒருவர் படுகாயமடைந்தார்.
பெங்களூரு நாராயணபுரம் பகுதியைச் சேர்ந்த ரகீப்பின் மகன் சாத் (22). இவர் வண்டலூரில் உள்ள தனியார் கல்லூரியில் படித்து வருகிறார். கல்லூரி விடுமுறையையொட்டி, வண்டலூரில் இருந்து இருசக்கர வாகனத்தில் தனது சொந்த ஊரான பெங்களூரு நோக்கி சென்று கொண்டிருந்தார்.
அப்போது, வாணியம்பாடி அருகே பெருமாள்பேட்டை பகுதியில் சென்னை–பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் சென்றபோது, டிப்பர் லாரி ஒன்று யூ-டர்ன் எடுத்ததாக கூறப்படுகிறது. இதனால் பின்னால் இருசக்கர வாகனத்தில் வந்த சாத், எதிர்பாராதவிதமாக டிப்பர் லாரி மீது மோதி விபத்துக்குள்ளானார். இதில் அவர் படுகாயமடைந்தார்.
விபத்தை பார்த்த அப்பகுதி மக்கள், சாதை மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற வாணியம்பாடி நகர போலீசார், விபத்துக்குள்ளான டிப்பர் லாரியை பறிமுதல் செய்தனர். மேலும், லாரி ஓட்டுநர் அர்ஜுனனிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.



