மார்த்தாண்டம், ஜூன் 26 –
மார்த்தாண்டம் அருகே பெரியவிளை பகுதியை சேர்ந்தவர் வினேஷ் (27). பைனான்ஸ் ஊழியர். சம்பவத்தன்று அவரது நண்பரான ராபின்சன் (27) என்பவருடன் சேர்ந்து உறவினர் வீட்டிற்கு பைக்கில் சென்றுள்ளார். அப்போது கல்லுக்கூட்டம் சந்திப்பு பகுதியில் சென்ற போது அதே பகுதியை சேர்ந்த கூலித் தொழில் செய்து வரும் காட்வின் (30) என்பவர் ஓட்டி வந்த பைக்கில் வினேஷ் ஓட்டிய பைக் நேருக்கு நேர் மோதியது.
இது தொடர்பாக ஏற்பட்ட தகராறில் வினேஷ் மற்றும் ராபினை, காட்வின் மற்றும் கண்டால் அடையாளம் தெரியும் 3 பேர் சேர்ந்து கம்பியால் தாக்கி விட்டு தப்பியுள்ளனர். இதில் படுகாயம் அடைந்த இரண்டு பேரையும் மீட்டு அக்கம் பக்கத்தினர் குழித்துறை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இது குறித்து வினேஷ் மார்த்தாண்டன் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில் காட்வின் மற்றும் கண்டால் அடையாளம் தெரியும் நான்கு பேர் மீது வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.


