தஞ்சாவூர், ஆக. 25:
தஞ்சாவூர் மாவட்டத்தில் பள்ளிக்கல்வித்துறை சார்பில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவ, மாணவிகளுக்கான கலைத் திருவிழா தொடங்கியது. தஞ்சாவூர் தூய அந்தோனியார் அரசு உதவி பெறும் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நடைபெற்ற தொடக்க நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சியர் ரேவதி கலந்து கொண்டு கலைத் திருவிழாவை தொடங்கி வைத்தார்.
நிகழாண்டுக்கான கலைத் திருவிழா போட்டிகள் ‘இளையோர் திறன்’ என்ற மையக்கருத்தின் அடிப்படையில் பள்ளி, வட்டாரம், மாவட்டம் மற்றும் மாநில அளவில் நடத்தப்படுகின்றன. அரசு பள்ளி மாணவர்களுக்கும், அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கும் தனித்தனியாக போட்டிகள் நடத்தப்படுகின்றன. மாவட்ட அளவிலான போட்டிகள் இரண்டு நாட்கள் நடைபெறுகின்றன.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் ரேவதி கூறுகையில், மாவட்ட அளவில் 9-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவிகளுக்காக 32 வகையான போட்டிகள் நடத்தப்படுகின்றன. தூய அந்தோனியார் அரசு உதவி பெறும் மேல்நிலைப்பள்ளி, கல்யாணசுந்தரம் அரசு உதவி பெறும் மேல்நிலைப்பள்ளி மற்றும் பெண்கள் கிறிஸ்தவ அரசு உதவி பெறும் மேல்நிலைப்பள்ளி ஆகிய மூன்று பள்ளி வளாகங்களில் போட்டிகள் நடைபெற்று வருகின்றன என்றார்.
தூய அந்தோனியார் பள்ளி வளாகத்தில் கவின்கலை மற்றும் நுண்கலை பிரிவுகளின் கீழ் பல்வேறு போட்டிகள் நடைபெற்றன. இதில் ஓவியம் வரைந்து வண்ணம் தீட்டுதல், பானை ஓவியம், களிமண் சிற்பம், மணல் சிற்பம், செதுக்குச் சிற்பம், காய்கறி, சோப்பு மற்றும் மெழுகு சிற்பம், ரங்கோலி உள்ளிட்ட போட்டிகளில் மாணவ, மாணவிகள் ஆர்வத்துடன் பங்கேற்றனர்.
மாணவர்களின் தனித்திறன், படைப்பாற்றல் மற்றும் கலை ஆர்வத்தை வெளிப்படுத்தும் வகையில் இப்போட்டிகள் அமைந்துள்ளன. பல்வேறு பள்ளிகளைச் சேர்ந்த மாணவர்கள் தங்களது திறமைகளை வெளிப்படுத்தி, போட்டிகளில் உற்சாகமாக கலந்து கொண்டனர்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் பேபி உள்ளிட்ட கல்வித்துறை அதிகாரிகள், ஆசிரியர்கள் மற்றும் மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.



