தஞ்சாவூர், மே 19 –
சமூக வலைத்தளங்களில் வேலை வாய்ப்புகள் குறித்த போலி விளம்பரங்களை பொதுமக்கள் நம்ப வேண்டாம் என்று தஞ்சாவூர் மாவட்ட கலெக்டர் பிரியங்கா பங்கஜம் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது: வேலை வாய்ப்பு துறையின் மூலம் வேலைவாய்ப்பு அலுவலக பதிவு புதுப்பித்தல், கூடுதல் கல்வித்தகுதி பதிவு செய்தல், முகவரி மாற்றம், காலியிடங்களை பரிந்துரை செய்தல், தொழில் நெறி வழி காட்டுதல், வேலை வாய்ப்பு இளைஞர்களுக்கான உதவித் தொகை திட்டம் போன்ற சேவைகள் எவ்வித கட்டணம் இன்றி வழங்கப்பட்டு வருகிறது.
மேலும் இந்த அனைத்து சேவைகளும் www.tnvlaivaaippu.gov.in என்ற இணையதளம் வாயிலாக மனுதாரர்கள் பதிவுகள் செய்து கொள்ள வசதிகள் ஏற்படுத்தப்பட்டு உள்ளது. இந்த நிலையில் இந்த சேவைகள் வாட்ஸ் அப், முகநூல், இன்ஸ்டாகிராம், யூடியூப் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் காணொளிகள் வாயிலாக கட்டணத்தின் அடிப்படையில் செய்து தருவதாக தெரிவித்து விளம்பரங்கள் பரவுகின்றன.
இது போன்ற போலி விளம்பரங்களையும் அல்லது இடை தரங்களையும் பொதுமக்கள் நம்பி தனிப்பட்ட விவரங்களையும் அல்லது பணத்தையும் கொடுத்து ஏமாற வேண்டாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.



