தஞ்சாவூர், மே 26 –
10 நாட்களுக்குள் டாஸ்மாக் கடை மூடாவிட்டால் உண்ணாவிரதம் இருப்போம் என கலெக்டரிடம் சேதுபாவா சத்திரம் மக்கள் மனு அளித்துள்ளனர். தஞ்சாவூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட ரங்கில் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடந்தது. தஞ்சாவூர் மாவட்டம் சேது பாவா சத்திரம் பகுதியைச் சேர்ந்த விவசாயிகள், சமூக ஆர்வலர்கள் என 10க்கும் மேற்பட்டவர்கள் கலெக்டர் அலுவலகத்திற்கு வந்தனர்.
பின்னர் இவர்கள் கலெக்டர் பிரியங்கா பங்கஜத்திடம் மனு அளித்தனர். அந்த மனுவில் கூறி இருப்பதாவது: சேதுபாவாசத்திரம் ஊராட்சியில் இந்துக்கள், இஸ்லாமியர்கள்,
கிறிஸ்தவர்கள் என அனைத்து தரப்பினர் ஜாதி மத பேதமின்றி சகோதர சகோதரிகளாக பழகி வருகிறோம்.சேதுபாவா சத்திரம் கிழக்கு கடற்கரை சாலையில் பள்ளிகள், தர்கா, கோவில்கள், விசைப்படகு பழுது பார்க்கும் இடம் போலீஸ் நிலையம் ஆகியவை 100 மீட்டருக்குள் அமைக்கப்பட்டுள்ளது அந்த பகுதிகளை டாஸ்மார்க் கடை அமைக்க கூடாது என கடந்த 2024 ஆம் ஆண்டு முதல் எதிர்ப்பு தெரிவித்து மாவட்ட கலெக்டரிடம் புகார் கொடுத்து வருகின்றோம்.
மக்களின் கோரிக்கையை ஏற்காமல் அப்பகுதியில் புதிதாக டாஸ்மார்க் கடை திறக்கப்பட்டுள்ளது. தற்போதைய ஆட்சியில் தமிழக முதலமைச்சர் விஜய் வழிபாட்டுத்தலங்கள் கல்விக்கூடங்கள், பஸ் நிலையங்களில் இருந்து 500 மீட்டருக்குள் அமைந்த டாஸ்மாக் கடைகளை நிரந்தரமாக மூட உத்தரவு பிறப்பித்து கடைகள் மூடப்பட்டு வருகின்றன.
சேதுபாவாசத்திரத்தில் புதிதாக அமைக்கப்பட்ட டாஸ்மாக் கடையிலிருந்து 50 மீட்டர் நேர்எதிரே போலீஸ் நிலையமும், 100 மீட்டருக்குள் தொடக்கப்பள்ளி, உயர்நிலைப் பள்ளி அமைந்துள்ளது. மேலும் 100 மீட்டருக்குள் வழிபாட்டுத் தலங்கள் உள்ளது. முதலமைச்சரின் உத்தரவை மீறி சேதுபாவா சத்திரத்தில் டாஸ்மார்க் கடை தொடர்ந்து இயங்கி வருவது அதிர்ச்சி அளிக்கிறது.
இந்த கடையால் இளைஞர்கள், மாணவர்கள், விவசாயிகள், மீனவர்கள், வணிகர்கள் பலர் குடி போதைக்கு ஆளாகி அவர்களது குடும்பங்களின் எதிர்காலம் கேள்விக்குறியாக உள்ளது. எனவே சேதுபாவா சத்திரத்தில் உள்ள டாஸ்மாக் கடையை 10 நாட்களுக்குள் மூடாவிட்டால் உண்ணாவிரதம் இருக்க முடிவு செய்துள்ளோம். மேற்கண்டவாறு அதில் கூறப்பட்டுள்ளது.



