தருமபுரி, அக். 16 –
சட்ட விரோத கல் குவாரி குறித்து அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்ததால் கொலை மிரட்டல் விடுக்கிறார்கள் என்று தருமபுரி மாவட்டம் போலீஸ் சூப்பிரண்டிடம் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது. தருமபுரி டீச்சர்ஸ் காலனியைச் சேர்ந்தவர் மனோ என்கிற மாரியப்பன் நேற்று தருமபுரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மகேஸ்வரனிடம் ஒரு புகார் மனு கொடுத்தார்.
அந்த புகார் மனுவில் கூறியுள்ளதாவது: நான் எனது சகோதரி ஆனந்தி, மாமா ராஜேஷ் ஆகியோரது குடும்பத்தினருடன் வசித்து வருகிறேன். எனது சகோதரிக்கு ஒரு மகளும், ஒரு மகனும் உள்ளனர். இந்த நிலையில் 14-ம் தேதி அதிகாலை காரில் வந்த ஒரு சிலர் எனது சகோதரியின் வீட்டு கேட்டை உடையும் அளவிற்கு தட்டிக் கொண்டிருந்தனர். மேலும் கெட்ட வார்த்தைகளால் யாருடா? வீட்டில் உள்ளது வெளியே வாருங்கள் என்று சத்தம் போட்டனர். அப்போது நான் வெளியே வந்து பார்த்தபோது ஓமலூர் பகுதியைச் சேர்ந்த குவாரி உரிமையாளர் உத்திரசாமி என்பவரும், ஒரு சில போலீசாரும் இருந்தனர். வீட்டிலிருந்து உங்கள் மாமாவை வெளியே வர சொல், இல்லையென்றால் நடப்பதே வேறு என்று என்னை மிரட்டினார்கள்.
இது பற்றி தகவல் தெரிவித்து எங்களது வழக்கறிஞரை உடனடியாக வர சொன்னோம். அவர் வீட்டின் முன்பு நின்று கொண்டிருந்தவர்களிடம் ராஜேஷ் ஊரில் இல்லை, நீங்கள் யார் என்று கேட்டார். நான் சட்டத்துக்கு புறம்பாகவும், அனுமதி இல்லாமலும் நான் நடத்தி வரும் குவாரி குறித்து அதிகாரிகளுக்கு தகவல் சொன்ன உனது மாமாவை கொலை செய்து விடுவோம். உங்களால் என்ன முடியுமோ அதை செய்யுங்கள், என்னை ஒன்றும் செய்ய முடியாது, வழக்குப்பதிவு செய்யாமலேயே போலீசாரை அழைத்து வந்துள்ளேன் என்று மீண்டும் வீட்டின் கதவை தள்ளிக் கொண்டு உள்ளே நுழைய முயன்றனர். அதிகாலையில் நடந்த இந்த சம்பவத்தால் அக்கம் பக்கத்தினர் பதட்டம் அடைந்து விட்டனர்.
மேலும் வீட்டில் இருக்கும் பெண்களையும் தரக்குறைவாக பேசி மிரட்டினர். நாங்கள் அவர்களை உள்ளே நுழைய விடாததால் சிறிது நேரம் கழித்தவுடன் அவர்கள் சென்று விட்டனர். எனவே எனது மாமாவை கொலை செய்து விடுவேன் என்று மிரட்டிய சட்ட விரோத குவாரி நடத்தி வரும் ஓமலூர் பகுதியைச் சேர்ந்த உத்தரசாமி மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டுகிறோம். மேலும் வழக்கு பதிவு ஏதும் செய்யாமல் தன்னிச்சையாக எங்கள் வீட்டுக்கு வந்த போலீசார் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டுகிறோம் என்று அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.


