கோவை, செப்.15: கோவை ஆர்.எஸ்.புரம் பகுதியில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ வித்தக விநாயகர் திருக்கோவிலில் 37-வது ஆண்டு விநாயகர் சதுர்த்தி திருவிழா வெகு சிறப்பாக நடைபெற்றது.
விழாவையொட்டி விநாயகர் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார். இதனைத் தொடர்ந்து சிறப்பு பூஜைகள் மற்றும் வழிபாடுகள் நடைபெற்றன. கோவிலுக்கு ஆதரவற்ற குழந்தைகள், மனநலம் குன்றிய குழந்தைகள், மாற்றுத்திறனாளி குழந்தைகள் மற்றும் மாணவ, மாணவிகள் அழைத்து வரப்பட்டு, அவர்களின் நலனுக்காக சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன.
பின்னர் குழந்தைகள் மற்றும் மாணவ, மாணவிகளுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. அனைவரும் உடல் நலம், மனநலம் மற்றும் கல்வியில் சிறந்து விளங்க வேண்டும் என சிறப்பு பிரார்த்தனையும் நடைபெற்றது.
இந்த திருக்கோவிலில் கடந்த 37 ஆண்டுகளாக தினமும் 108 வகையான மூலிகைகளைக் கொண்டு யாகம் நடைபெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், தினமும் காலை நேரத்தில் விநாயகருக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் வழிபாடுகள் நடத்தப்பட்டு வருகின்றன.
கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு தினமும் காலை கூழ் மற்றும் பாயாசம், மாலை நேரத்தில் பலகாரங்கள் வழங்கப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது. இதனால் பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் இக்கோவில் தனிச்சிறப்பு பெற்றதாக தெரிவிக்கப்படுகிறது.
விநாயகரை தரிசித்து தங்களது வேண்டுதல்களை நிறைவேற்றுவதற்காக ஏராளமான பக்தர்கள் தொடர்ந்து கோவிலுக்கு வந்து வழிபட்டு வருகின்றனர். விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி நடைபெற்ற சிறப்பு பூஜையில் பக்தர்கள் திரளாக கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.



